tamilnadu

img

சாதிய வன்மத்தோடு அதிகாரத் திமிரும் சேர்ந்தால்...

சென்னை:
கள்ளக்குறிச்சி தலித் இளைஞர்கள் மீது காவல்துறையின் வன்கொடுமைத் தாக்குதலை கண்டித்தும், சித்திரவதை செய்த காவல்துறை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்திடக்கோரி  தீண்டாமை ஒழிப்பு முன்னணி பிப்ரவரி 28 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது.

கடந்த ஜனவரி 17 அன்று இரண்டு தலித் இளைஞர்களை கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர்தலைமையிலான போலீஸார் காவல் நிலையத்தில் அடைத்து வைத்து சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் இச்சம்பவம் தொடர்பாக முழு விபரங்களை விசாரித்து உண்மையறிவதற்கான குழு பிப்ரவரி 20 ஆம் தேதி புதுஉச்சிமேடு கிராமத்திற்கு சென்றனர். இக்குழுவில் மாநிலத்துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் மு.கந்தசாமி,  ப.செல்வன், மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் வி.ராஜா, மாவட்டச்செயலாளர் இரா.பூமாலை ஆகியோர் சென்றிருந்தனர்.

இக்குழு கண்டறிந்த விவரங்கள் வருமாறு:
படுக்கையறைக்குள் புகுந்து காவல்துறையின் வன்கொடுமை 
கள்ளக்குறிச்சி தாலுகா வரஞ்சரம் காவல் எல்லையில் உள்ள புதுஉச்சிமேடு தலித் குடியிருப்பில்  கோவிந்தராஜ்  வசிக்கிறார். இவரதுமனைவி கலைச்செல்வி, மூன்று மகன்கள் மற்றும்மருமகள் ஆகியோர் மாட்டுப் பொங்கலை கொண்டாடிவிட்டு அசந்து தூங்கியுள்ளனர். அன்று இரவு ஜனவரி 17  அதிகாலை 3.30 மணியளவில் கள்ளக்குறிச்சி காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார்,  வரஞ்சரம் காவல் நிலையசார்பு ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் மூன்றுபோலீஸ் வாகனத்தில் 15 க்கும் மேற்பட்ட  காவல்துறையினர் தலித் குடியிருப்புக்குள் நுழைந்துகோவிந்தராஜ் வீட்டின்  கதவை உடைத்து அத்துமீறி நுழைந்தனர். பின்னர் வன்கொடுமைகளை அரங்கேற்றினர். மனித மாண்புகளுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்கு எதிராகவும் நடந்துள்ளனர். கோவிந்தராஜின் மகனான ஜோதிபாசுவை பிடிக்க அவரது படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் அவரை அடித்துஎழுப்பி பனியனை கிழித்தும்,இழுத்தும் சென்றுள் ளனர். எதற்காக இவ்வளவு கேவலமாக நடத்துறீங்க என்று கேள்வியெழுப்பிய ஜோதிபாசுவின் மனைவியிடம் “ஈனசாதிப்பய இவனெல்லாம் எங்கள பார்த்து சட்டம் பேசுறான்டி” என்றும் “போலீஸ்னா என்னான்னு இவனுக தெரிஞ்சுக்கனும்” என்று வசைமாரி பொழிந்து கொண்டே ஜோதிபாசுவை ஆய்வாளர் அடித்திருக்கிறார். இதைப்பார்த்த குடும்பத்தினர் கதறியுள்ளனர்.

ஜோதிபாசுவின் தாயார் கலைச்செல்வி ஆய்வாளரிடம் என் மகன் என்ன தவறுசெய்தான்என்று கேட்டிருக்கிறார். அவரை மார்பில் கைவைத்து தள்ளி மிக இழிவாகப் பேசி திட்டியிருக்கிறார் ஆய்வாளர். ஜோதிபாசுவின் சகோதரர் கண்ணதாசனையும் அடித்து இழுத்து வந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இரண்டு மகன்களையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றியதை பார்த்ததும் “நானும் வருகிறேன்” என்று கோவிந்தராஜ்  போலீஸ் வாகனத்தில் ஏறியிருக்கிறார். அவரைகீழே தள்ளிவிட்டு “இன்றோடு உனது பிள்ளைகளின்  கதை முடிஞ்சிடும் “என்றும் ஆய்வாளர் மிரட்டியுள்ளார்.

காவல்நிலையத்தில் நடந்த வன்கொடுமைகள் 
காவல் அதிகாரிகள் இருக்கக்கூடிய போக்குவரத்து காவல் நிலையத்திற்குள் கொண்டுசென்று அதிகாலை 3.30  மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை ஜோதிபாசு, கண்ணதாசன் ஆகிய இரண்டு இளைஞர்களையும் ஆய்வாளர்விஜயகுமாரும், சார்பு ஆய்வாளர் ஏழுமலையும்  மிக கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். காவல் அதிகாரிகளை எதிர்த்து கேள்வி கேட்கிறாயா; சட்டம் பேசுறீங்களா என்று சொல்லிச் சொல்லியே அடித்துள்ளனர்.காவல் ஆய்வாளர் விஜயகுமார், ஒரு ரவுடியைப் போல் லத்தியை சுழற்றி  கால்பாதம், முதுகுஆகிய இடங்களில் கொடூரமாக  தாக்கியுள்ளார். கண்ணதாசனை இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் காதுகளை சேர்த்து அறைந்ததில் இப்போதுவரை காதுக்குள் காயம் இருக்கிறது. குனியவைத்தும், முட்டியிட வைத்தும், நெஞ்சு முடியை இழுத்தும் குரூரமான முறையில் தாக்கியிருக்கிறார்கள்.இரண்டு தலித் இளைஞர்களிடம் காவல் ஆய்வாளரும், சார்பு ஆய்வாளரும் வார்த்தையில்விளக்க முடியாத அளவுக்கு பகிரங்கமாக பாலியல் வன்முறையையும் அரங்கேற்றியுள்ளனர்.

அதற்கு மறுத்த அந்த இளைஞர்கள் மீது கோபமடைந்த காவல்துறை அதிகாரிகள், உடைகளை களைந்து மிருகத்தனமாக தாக்க ஆரம்பித்துள்ளனர். காவல்நிலையத்துக்குள் வந்த காவலர்கள், போன காவலர்கள் எனமாறிமாறி அடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்த இருவரின் மீதும் தண்ணீரைத் தெளித்து மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக “நல்லா நடந்தால் அடிப்பதை விட்டுடுவோம்” என்று ஆய்வாளர் சொல்லியதை நம்பிய இருவரும்  வலியை தாங்கிக் கொண்டு நேராக நடந்திருக்கிறார்கள். அப்போது ஆய்வாளர் விஜயகுமார் “இவனுகள என்னடா அடிச்சீங்க,  நல்லநடக்கிற அளவுக்கு இவனுகளுக்கு தெம்புஇருக்குடா” என்று ஜோதிபாசுவை பீரோவில் சாத்தி தப்பிக்காத வகையில் இரு கைகளையும் இரண்டு காவலர்களை இழுத்துப் பிடித்துக்கொள்ள சொல்லி ஆய்வாளரே இரும்புபூன்போட்ட லத்தியால் அடித்து இருக்கிறார்.இதே தன்மையில் சுவரில் சாத்தி வைச்சுஇரண்டு காவலர்களை பிடித்து இழுக்கச்சொல்லிசார்பு ஆய்வாளர் ஏழுமலை இரும்பு பூன்போட்ட லத்தியால் தாக்கியிருக்கிறார்.பூட்ஸ் காலால் ஜோதிபாசுவின் உயிர் தளத்தில் மிதித்தும் உங்கள் இருவருக்கும் இனிமனைவி நினைப்பே வரக்கூடாதென்று  சொல்லிகொண்டே சித்திரவதை செய்திருக்கிறார்கள்.
இதில் இரண்டு பேருக்கும் உடல் முழுவதும்உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது .கண்ணதாசனுக்கு -இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. “மருத்துவரிடமும்,  நீதிபதியிடமும் நடந்த விவரங்களை சொன்னால் மீண்டும்போலீஸ் கஸ்டடி எடுத்து கொடூரமான முறையில் அடித்து கொன்று புதைத்து விடுவோம்” என்றும் அச்சுறுத்தி  மிரட்டி அன்று மாலை 6 மணிக்கு மேல் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறைக்குள் தள்ளியுள்ளது காவல்துறை. எவ்விதமான சிகிச்சைகளும் கொடுக்க
வில்லை .

சம்பவத்திற்கான பின்னணி என்ன?  
கள்ளக்குறிச்சி தாலுக்கா வரஞ்சரம் புதுஉச்சிமேடு தலித் குடியிருப்பை சேர்ந்த கோவிந்தராஜூ, கலைச்செல்வி ஆகியோரின் மகன்கள் கண்ணதாசன், ஜோதிபாசு ஆகியோர். இருவரும் கடந்த மாட்டு பொங்கல் 16.01.2020 அன்றுசுமார் 4 மணிக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை கண்டாச்சிமங்கலம் கடைத்தெருவில் வாங்கிக்கொண்டு சொந்த கிராமத்துக்கு பழைய டிவிஎஸ் 50 டூவிலரில் திரும்பியுள்ளனர்.வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் காவலர்கள் வாகன சோதனை
யில் இருந்துள்ளனர். அப்போது கண்ணதாசன், ஜோதிபாசு  ஆகியோர் வந்த வண்டியை தடுத்துநிறுத்தியுள்ளனர்.  வண்டியை ஓட்டி வந்த கண்ணதாசன் நிறுத்தியுள்ளார். வண்டி சற்று தூரம் சென்று நின்றுள்ளது . அப்போது வாகன தணிக்கையில் இருந்த உதவி ஆய்வாளர் ஏழுமலை வண்டியை விட்டு இறங்கிய கண்ணதாசனைப் பார்த்து  “வண்டியை  நிறுத்த மாட்டியாடா  அவ்வளவு பெரிய ஆளா நீ”என்று கோபமாக கேட்டு கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதை  சற்றும் எதிர்பாராத  ஜோதிபாசு ஏன் எனதுதம்பியை அடித்தீர்கள் என்று கேட்டுள்ளார். நீ எந்த ஊருடா என்று கேட்டு ஊரை தெரிந்ததும்,சார்பு ஆய்வாளருக்கு இவர்களிருவரும் தலித் என்று தெரிந்ததும் ஆத்திரம் அதிகமாகிவிட்டது. அவ்விடத்தில் இதை கவனித்து கொண்டிருந்த மக்கள் பெருமளவில் கூடியுள்ளனர். மேலும் காவல்துறை அராஜகமாக நடந்துகொண்டதை கேள்வி கேட்டுள்ளனர். பொது மக்கள் முன்னிலையில் தலித் இளைஞர்கள் நம்மைப் பார்த்துகேள்வி கேட்பதா சட்டம் பேசுவதா என்பதுதான் காவல்துறையின் வன்கொடுமைக்கு மையப்புள்ளியாகும்.சாதிய சிந்தனையுடன், அதிகார திமிரும் சேர்ந்து இத்தகைய அராஜகத்தை கள்ளக்குறிச்சி காவல்துறையினர் அரங்கேற்றியுள்ளனர்.

கோரிக்கைகள் 
எனவே, இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றிய கள்ளக்குறிச்சி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும்  வரஞ்சரம் உதவி ஆய்வாளர் ஏழுமலைமீது  எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புசட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். உடன் இருந்த பிற காவலர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்திட வேண் டும்.சம்பந்தப்பட்டவர்களை பணி நீக்கம் செய்திடவேண்டும். தலித் இளைஞர்கள் மீது போடப் பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்திட வேண்டும். கால்  எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள கண்ணதாசனுக்கு உயர் சிகிக்சை அளிக்க வேண்டும் .மாவட்ட நிர்வாகம் தலித் மக்களுக்கு  உரியபாதுகாப்பு வழங்கிட வேண்டும். உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜ் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 28.2.2020அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம்நடைபெற உள்ளது.மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை,  முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், துணைப் பொதுச் செயலாளர்கள் மு.கந்தசாமி, ப.செல்வன், மாநில செயலாளர்கள் வாஞ்சிநாதன், ஏ.சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.'

;