tamilnadu

img

காவல்துறையின் அலட்சியத்தால் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகள்....

சென்னை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலாண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் இடையவலசை கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி என்ற 20 வயது பெண்ணும், புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை கிராமத்தைச்சேர்ந்த விவேக் என்ற இளைஞனும்ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும்பிற்படுத்தப்பட்ட வகுப்பில்  வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதலை தெரிந்து கொண்ட சாவித்திரியின் பெற்றோர்கள் அவளை கடுமையாக தாக்கி காயப்படுத்தியதோடு மட்டுமல்லாது  அவளுக்கு  வேறு ஒரு திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.எனவே காயத்ரி தனது காதலன் விவேக்கிற்கு போன் செய்து தன்னை இந்த வீட்டில் இருந்து மீட்டுக்கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்ளவே, இருவரும்  கோவை சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்வைத்துவங்க முடிவெடுத்தனர். கடந்த 7.6.2020 அன்று இருவரும் கோவைசெல்வதற்காக புறப்பட்டுச்சென்ற போது கரூர் மாவட்டம் குளித்தலையில்  சோதனைச்சாவடியில் அவர்களை சோதனை செய்தவர்கள் சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரையும் குளித்தலை  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குளித்தலை காவல்துறையினர்  சாவித்திரியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து சாவித்திரியை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது தன்னை தன் பெற்றோர் ஏற்கெனவே கடுமையாக தாக்கியதால் உடல் முழுவதும்  ஏற்பட்ட காயங்களை காண்பித்து தன்னை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அவர்கள் என்னை கொலை செய்து விடுவார்கள் என  எவ்வளவோ  சாவித்திரி கெஞ்சியும் காவல்துறை அதை மறுத்து அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில்  11. 6.2020 அன்று  காலை  சாவித்திரி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.  யாருக்கும் தெரியாமல்  அவளது மரணத்தை மறைத்துஅவளது பெற்றோர்களும் உறவினர்களும்  உடலை எரியூட்டியுள்ளனர். இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. அவளது  மரணத்திற்குக் காரணமான  சாவித்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீதும்,  அவளுடைய மரணத்தை மறைத்து உடலை  எரிப்பதற்கு காரணமான அந்த கிராமத்தைச்சேர்ந்தவர்கள் மீதும்   வழக்கு பதிவு செய்து உடனடியாக கைதுசெய்ய வேண்டுமாய் அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்க தமிழ் மாநிலக்குழு கோருகிறது. மேலும்சட்டப்படி முடிவெடுக்கும் வயது   நிரம்பிய சாவித்திரி அவளது பெற்றோருடன் செல்ல மறுத்த போதும்  அவளின்  விருப்பத்திற்கு மாறாக அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்த குளித்தலை காவல்துறையினரே இம்மரணத்திற்கு  முக்கிய குற்றவாளிகள் ஆவர்.எனவே அவர்களை பணிநீக்கம் செய்து,உரிய,வழக்கு பதிவு செய்து  உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. 

மேலும் இது போன்று விருப்பத் திருமணங்கள், சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்கின்ற தம்பதிகளை பாதுகாக்க  அந்தந்த மாவட்டங்களில் அவர்களுக்கென்று ஒரு சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு இடைக்காலமாக தங்குவதற்கு குறுகிய  கால தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்உயர்  நீதிமன்ற உத்தரவு உள்ளது.  மேலும்  உயர் நீதிமன்ற உத்தரவின்படி இது போன்ற சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்களை பாதுகாப்பதற்கான  சிறப்புப் பிரிவு மாவட்டங்கள் தோறும் இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தும் அது காகிதத்தில்எழுத்தாகவே உள்ளது. எந்த மாவட்டத்திலும் இது போன்ற சிறப்புப் பிரிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக தமிழக அரசு இத்தகைய சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அவசர கால ஏற்பாட்டினை செய்யவில்லை எனில் சாவித்திரி யைப்போன்ற  எண்ணற்ற இளம்பெண்களையும் இளைஞர்களையும்  சாதி வெறிக்கு  தமிழகம் பலி கொடுக்க வேண்டி வரும் என்பதை தமிழக அரசை மாதர் சங்கம் எச்சரிக்கிறது.