tamilnadu

img

சென்னையில் ‘மக்கள் மருத்துவர்’ மறைவு... முதல்வர்-ஸ்டாலின் இரங்கல்

சென்னை:
ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடியை சார்ந்த மருத்துவர் திருவேங்கடம் 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். ஆரம்ப காலத்தில் அவர் 2 ரூபாய்க்கு மட்டுமே மருத்துவம் பார்த்து சேவையாற்றி வந்தார்.இந்நிலையில், 70 வயதான திருவேங்கடம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13ஆம் தேதி தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு, காலமானார். இது,அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், பிரீத்தி என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர்.கடந்த மார்ச் மாதம் வரை செல்போன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்தார்.அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐந்து ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் வீரராகவன் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை மருத்துவ சேவை வழங்கியுள்ளார். மருத்துவரை இழந்து வாடும் குடும்பத்தார், வியாசர்பாடி, எருக்கஞ் சேரி மக்களுக்கு இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்! எளிய மக்களின் உயிர் காக்கும் அன்புக்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.அதேபோல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;