சென்னை:
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மாதிரிப் பள்ளியாக, குளித்தலை கல்வி மாவட்டத்தில் பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்துள்ளது. இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமம் பஞ்சப்பட்டி. இந்தக் கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில், 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
12 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இப்பள்ளியில், 3 கிலோவாட் சூரிய மின்சாரம் மூலம் தடையற்ற மின் வசதி, பரந்த விளையாட்டு மைதானம், இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்பறை, ஆங்கிலம், கணினி, அறிவியல் ஆய்வகங்கள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி எனப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.அதேபோல், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி, மின்னணுவியல் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, நூலக வசதி, கழிவறை, குடிநீர் வசதி, பாட இணை செயல்பாடுகளான மொழிப்பாடம், அறிவியல், கணிதம், நுகர்வோர், காவலர், சுற்றுச்சூழல், உடல் நலக்குழு, ரெட் ரிப்பன் கிளப், தொல்லியல் ஆய்வு மன்றங்கள், ஜூனியர் ரெட் கிராஸ், பசுமைப்படை, சாரண, சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணித் திட்டம், சாலைப் பாதுகாப்பு இயக்கம், பேரிடர் மேலாண்மைக் குழு, இளம் விஞ்ஞானிகள் குழு, மேல்நிலை வகுப்பில் சத்துணவியல் பாடப்பிரிவு ஆகிய பல்துறை சிறப்பம்சங்களுடன் கூடிய சிறப்பான கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த சிறப்பான செயல்பாடுகளைத் தொடர்ந்துதான், இந்தப் பள்ளி தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் குளித்தலை கல்வி மாவட்ட அளவில் மாதிரிப்பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.