tamilnadu

img

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசுக்கு எதிர்ப்பு.... 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்.....

சென்னை:
பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய மோடி அரசைக் கண்டித்து நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மார்ச் 15 அன்று தொடங்கினர்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஐடிபிஐ வங்கி தனியாருக்கு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனையேற்று இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் 10 லட்சம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள 14 ஆயிரம்வங்கி கிளைகளில் பணியாற்றும் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் 2 நாள் வேலை நிறுத்தத்தால் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தை யொட்டி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர்சங்கத் தலைவர் சி.எச்.வெங்கடாச் சலம், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்றார்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் என்.ராஜகோபால் விடுத்துள்ள அறிக்கையில், இந்த வேலைநிறுத்தத்தையொட்டி நாடு முழுவதும் அதிகாரிகளும், ஊழியர்களும் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இதேபோன்று எழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

;