சென்னை:
மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 17 அன்று தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3,000 ஆகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 ஆகவும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அருகாமை மாநிலங்களில்கூட மாத உதவித்தொகை கூடுதலாக கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிற நிலையில், நலத்திட்டங்களை அமலாக்குவதில் முன்னோடி மாநிலமென பெருமை பேசும் ஆளும் அஇஅதிமுக அரசு, இக் கோரிக்கையை கண்டுகொள்ள மறுக்கிறது.தனியார் துறை பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 விழுக்காடு இடங்களை உத்தரவாதப்படுத்தவும், இதற்காக தனியார் துறையினருக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கவும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 உறுதிப்படுத்தியிருக்கிற நிலையில், இந்த சட்ட விதியை நடைமுறைப்படுத்தவோ. ஊக்கத்தொகை வழங்காமல், தனியார் துறைகளை வழங்க வைக்கவோ, தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரியவில்லை. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.