சென்னை, டிச. 10 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில், மாநிலம் முழுவதும் மாடுகள், நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிப்படுவதாகவும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கும்பகோணம் தொகுதி திமுக உறுப்பினர் அன்பழகன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “தமிழ்நாட்டில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது; சென்னையில் உள்ளது போல் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையத்தை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க உள்ளோம். நாய்கள் தொல்லை குறித்த புகார்களுக்கு மாநகராட்சிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிராணிகள் வதைச் சட்டத்தில் நாய்கள் மற்றும் மாடுகளை முழுமையாக அகற்ற வழியில்லை. சில இடங்களில் மாடுகளைப் பிடித்தால் அதன் உரிமையாளர்கள் கோபமடைகின்றனர்.
மாடுகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.