tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்கு விரிவான ஏற்பாடுகளை செய்க.... பொதுமுடக்கத்தால் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்குக.... அரசின் தலைமைச்செயலாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....

சென்னை:
கொரோனா சிகிச்சைக்கு விரிவான மருத்துவஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமுடக்க அறிவிப்புகளால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏப்ரல் 30 வெள்ளியன்று அனுப்பியுள்ள கடித விபரம் வருமாறு:

கொரோனா தொற்று தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில் நோய்த்தொற்று பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்திடும் வகையில் கீழ்கண்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.தற்போது மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகளுக்கான படுக்கைகள் முழுவதுமாக  பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிதாகவரும் நோயாளிகளுக்கு படுக்கை அளிக்க இயலாத நிலைமை உருவாகியுள்ளது. இத்தகையபடுக்கைகளின் பற்றாக்குறையால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரை வீட்டிலேயே தனிமையில் இருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இது சரியானதல்ல. நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ஒருவர் வீட்டிலேயே இருப்பதால் அவர் மூலம் அந்த வீட்டிலுள்ள பிறருக்கும் நோய்த்தொற்று பரவும் நிலையும் உருவாகிறது. எனவே நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரையும் மருத்துவமனைகளில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்வதே மிக அவசியமானதாகும்.    ஆகவே,மருத்துவமனைகளில் தேவையான அளவில் படுக்கைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கவும்,  மேலும் பரவலான இடங்களில் தற்காலிக சிகிச்சை மையங்களையும் உருவாக்கிடவும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் அனைத்து மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கென தனியார் மருத்துவ கல்லூரிகள்,  பள்ளிகள், திருமண மண்டபங்களை பயன்படுத்த வேண்டும்.

தேவையான ஆக்சிஜன் இருப்பை உறுதிசெய்க
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அனேகமாக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அறவே காலியாக இல்லை. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் பல மணி நேரமாக முயற்சித்தாலும் கூட மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற முடியவில்லை. கொரோனா நோயாளிகளில் மிகப்பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால், அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன்  வசதிகளோடு கூடிய  சிகிச்சைக்கான  ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தற்போதைய தேவையை விட வரும்நாட்களில் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரிக்கும் சூழல் இருப்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவிற்கு ஆக்சிஜன் இருப்பை உத்தரவாதம் செய்வதற்கான உரியஏற்பாடுகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு தமிழகத்தில் கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் தற்போது சென்னையில் ஒரு இடத்தில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்படுகின்றன.  சென்னையில் தொற்று பரவல் மிக அதிகமான உள்ளதால், சென்னையில் பல இடங்களிலும், மேலும் மாநிலம் முழுவதும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை முறைப்படுத்துக
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பல தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சைக்கான கட்டணமாக பல லட்சம் ரூபாய்வரையிலும் வசூலிக்கப்படுகிறது. ஒரு ரெம்டெசிவிர் ஊசிக்கு ரூபாய் முப்பதாயிரம் வரையிலும், ஒரு நாள் சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய்  வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எனவே தமிழகஅரசு இப்பிரச்சனையில் உறுதியாக தலையிட்டு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்க்கான கட்டண விகிதங்களை முறைப்படுத்த வேண்டுமெனவும்,  தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசின் சார்பில் ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வாங்கப்பட்டு, அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் எனும் அறிவிப்பை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் தமிழகத்திற்கு அத்தகைய தடுப்பூசிகள் இன்னும் வந்து சேரவில்லையெனவும், மத்திய அரசாங்கத்திடமிருந்து அதற்கான ஒப்புதல் கிடைக்கவில்லையெனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசால் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றரை கோடி  தடுப்பூசிகளை விரைந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தட்டுப்பாடின்றி அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தற்போது தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கான கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்கள், பணியாளர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர்களுக்கு அரசு நிரந்தரப் பணியாளர்களுக்கு ஈடான ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

நிவாரண உதவி ரூ.7500 வழங்கிடுக
தமிழக அரசின் பொதுமுடக்க அறிவிப்பால், சுற்றுலா தொழில், வணிக வளாகங்களில் உள்ள கடைகள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், நாடகம், கூத்து உள்ளிட்ட கிராமிய கலைஞர்கள்,  இசைக்கலைஞர்கள், திரையரங்கத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசின் பொதுமுடக்க அறிவிப்பால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள அனைவருக்கும்  நிவாரண உதவியாக  மாதம்தோறும் ரூ.7500 - ஐ உடனடியாக வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;