tamilnadu

பெண்ணுரிமைப் போராளி மைதிலி சிவராமன் மறைவுக்கு மாதர் சங்கம் இரங்கல்....

சென்னை:
தமிழக ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபக தலைவரும், சிறந்த தொழிற்சங்க இயக்கத்தலைவரும், பெண்ணுரிமைப்போராளியுமான தோழர் மைதிலி சிவராமன் மறைவிற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

ஜனநாயக மாதர் சங்கம் மட்டுமல்லாது,இடதுசாரி இயக்கமும், இச்சமூகமும் ஒருசிறந்த போராளியை இழந்துவிட்டது. இவர்ஒரு சிறந்த எழுத்தாளர் , சிறந்த பத்திரிகையாளர். சிறந்ததொழிற்சங்கத் தலைவர். ஒருசிறந்த ஆய்வாளர்.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்தமைதிலி தனது கல்வியின் நிமித்தம் சென்னைவந்தவர். தோழர் மைதிலி தனது மேல் படிப் பிற்காக அமெரிக்கா சென்ற போது அங்கு அந்நாட்டின் ஏகாதிபத்தியத்திய உணர்வு, கருப்பின மக்களுக்கெதிரான ஒடுக்கு முறை, வியட்நாம் போருக்கெதிரான மக்கள்கிளர்ச்சி போன்றவை மைதிலி சிவராமன் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கு தனக்கு கிடைத்த அரசுப்பணியை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். இங்குஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான போராட் டத்தை நடத்திய மார்க்ஸிய இயக்கத்தில் பால் ஈர்க்கப்பட்டார்.

1968ல் கீழவெண்மணியில் நடந்த படுகொலையை நேரில் சென்று அம்மக்களை சந்தித்து அப்பிரச்சனையை தன் எழுத்தின் மூலம் உலகறியச்செய்தவர்.வாச்சாத்தியில் பழங்குடி பெண்கள் வனத்துறையினரால் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது அங்கு நேரே சென்றுஅம்மக்களை சந்தித்து அவர்களின் தொடர் போராட்டத்திற்கு வழிகாட்டினார். தமிழக அரசிடம் கோரிக்கைகளை வைத்து போராட் டத்தை வழிநடத்தியவர்.சிஐடியு அமைப்பில் மாநில பொறுப் பேற்று சென்னையில் பல்வேறு தொழிற் சாலைகளில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்.பெண்கள் மீது தொடுக்கப்படும் பொருளாதார சுரண்டல் மற்றும் பாலியல் சுரண்டலுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் .அவர் வழிநடத்திய போராட்டமேபணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும் சட்டத்திற்கு அடித்தளமிட்டது என்றால் மிகையாகாது.

1980களில் சென்னையில் ஜனநாயக மாதர்சங்கத்தை கல்லூரி மாணவிகள் மத்தியிலும்,மத்திய தர பெண்கள் மத்தியிலும் எடுத்துச் சென்றவர்.சென்னையில் ரோட்டரி கிளப் உள்ளிட்டமத்தியதர பெண்கள் அமைப்பு , உயர் வர்க்கப்பெண்கள் அமைப்புகளை ஜனநாயக மாதர் சங்கத்தோடு இணைத்து சென்னையில் பல பிரச்சனைகளில் ஆய்வு உள்ளிட்ட தலையீடுகளை செய்தவர்.திருமணம் செய்து 7 ஆண்டுகளுக்குள் பெண்கள் இறந்தால் அதை சந்தேக மரணம் என்று கருதி ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்படும் இன்றைய நிலைக்கு வித்திட்டவர் தோழர் மைதிலி சிவராமன்.

பாலின நிகர் நிலை கல்வி குறித்து தொழிற்சங்கவாதிகளுக்கும், இடதுசாரி இயக்கத்தினருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பயிற்சி கொடுத்தவர்.பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து தமிழில் மொழிபெயர்த்து அடித்தட்டுபெண்களும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் கொண்டு சென்றவர்.பெண் சிசுக்கொலை,குழந்தை திருமணங்கள் குழந்தை தொழிலாளர்கள்,சாதிய ஒடுக்கு முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த ஆய்வுகளை தமிழகத்தில் நடத்தியவர்.கே.பி. ஜானகியம்மாள் அறக்கட்டளை உருவாக்கப்பட்ட போது அதன் இயக்குநராக இருந்து செயல்பட்டவர்.கேபிஜே அறக்கட் டளை மூலம் பெண்சிசுக்கொலை அதிகம் நடந்த உசிலம்பட்டி கருவேப்பிலை கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள பெண்குழந் தைகளின் கல்விக்கான உதவிகளை செய்து வந்தார்.

ஜனநாயக மாதர் சங்கத்திற்கு பல்வேறுவகுப்புக்குறிப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர். மகளிர் சிந்தனை மாத இதழ்உருவாக்கப்பட்ட போது அதன் ஆசிரியராக இருந்து சிறப்பாக அந்த இதழை கொண்டு சென்றவர்.வெண்மணி ஒரு களத்தின் பதிவு, ஆண்குழந்தைதான் வேண்டுமா?, கஸ்தூரிபா மகாத்மாவின் மனைவி எழுப்பிய கேள்விகள், வறுமையில் நசுக்கப்படும் குழந்தைகள், பெண்களும் மதச்சார்பின்மையும், சமூகம் ஒரு மறுபார்வை, ஒரு வாழ்க்கையின் துகள்கள் போன்ற புத்தகங்கள் இவரின் கள ஆய்வின் அடையாளங்கள்.இவரது இயக்கப்பணியால் ஈர்க்கப்பட்டபல பெண்கள் பெண்ணுரிமை செயல்பாட்டாளர்களாக இன்று களத்தில் நிற்கின்றனர்.தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியை ஜனநாயக மாதர்சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

அல்சைமர் என்ற நோயால் பாதிக்கப் பட்ட அவரை ஒரு குழந்தையை போல் பராமரித்து பாதுகாத்த தோழர் கருணாகரன்,அவரது மகள் கல்பனா ,மற்றும் பாலாஜிக்கு இயக்கம் நன்றிகடன்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

;