articles

img

உண்மையான அறிவுஜீவி.... (மைதிலி சிவராமன்)

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. எனது தலைமுறை அப்பொழுதுதான் கல்லூரி பல்கலைக்கழகங்களில் பயிலத் தொடங்கிய காலம். எங்களுக்கு சமூக உணர்வு துளிர்விட்ட காலம் அது. எந்த பாதையை தேர்ந்தெடுப்பது எனும் சிந்தனைகள் நிறைந்திருந்த காலம் அது.  ஏற்கெனவே தோழர் மைதிலி அவர்கள் மிக மிக முக்கியமான கொடூர நிகழ்வான 1968ஆம் ஆண்டு கீழ வெண்மணி படுகொலை குறித்து ஆய்வு செய்து சிறந்த ஆவணத்தை உருவாக்கியிருந்தார். 44 விவசாய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த ஆவணம் மிக ஆழமான புரிதலை உருவாக்கக் கூடிய ஒன்று. கிராமப்புறச் சூழல்கள் குறித்தும் நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டல் குறித்தும் சமூகத்தில் அடித்தட்டில் விளிம்புநிலையில் இருந்த தலித் மக்களின் வாழ்நிலை குறித்தும் அவரின் ஆய்வு புதிய வெளிச்சங்களை கொடுத்தது. எனது தலைமுறைக்கு அந்த ஆவணம் மிக முக்கிய திருப்புமுனை. அப்பொழுது மாணவர்களாக இருந்த எங்களிடையே அது மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது எனில் மிகை அல்ல.

யார் சிறந்த அறிவுஜீவி என்பதற்கு  தோழர் மைதிலியின் வாழ்வு ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம். மைதிலியின் மிகப்பெரிய தனித்துவம் என்னவெனில் அவர் தனது அறிவுசார் பணியை நடைமுறைப் பணியுடன் இணைத்தார். இது மிக மிக அபூர்வமான மிக முக்கியமானகுணாம்சம். இந்த தலைமுறையும் எதிர்கால தலைமுறையும் பின்பற்றவேண்டிய மிக முக்கிய வழிகாட்டல்.நெறிமுறை! இது சாதாரண சாதனைஅல்ல.யார் உண்மையான அறிவுஜீவி? ஒரு அறிவுஜீவி காய்கறியை போலபயன்படுத்தப்பட முடியும். சமையல்காரர் எப்படி காய்கறியை பயன்படுத்துகிறாரோ, துண்டு துண்டுகளாக வெட்டியோ அல்லது வேகவைத்தோ அல்லது வதக்கியோ காய்கறி பயன்படுத்தப்படுவது போல,  ஒரு அறிவு ஜீவி பயன்படுத்தப்பட முடியும். 

ஆனால் யார் உண்மையான அறிவு ஜீவி? 
எந்த அறிவுஜீவி தனது அறிவுசார் திறமை முழுவதையும் சமூகத்தின் தேவைக்கு சமூக சேவைக்குஅர்ப்பணிக்கிறாரோ அவர்தான் உண்மையான அறிவுஜீவி.  தோழர்மைதிலி அத்தகைய சமூக மாற்றத்துக்காக தன்னை அர்ப்பணித்துகொண்ட மிகச்சிறந்த அறிவுஜீவி. தோழர் மைதிலியின் வாழ்வு அதனைபறைசாற்றுகிறது. வெண்மணி ஆய்வுக்கு பிறகு நமது மகத்தான தலைவர் தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் மைதிலியை தொடர்பு கொண்டு பேசிய பின்னர் தோழர் மைதிலி இயக்கத்துக்குள் வந்தார். பன்முகத் தன்மை கொண்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். மாநிலக் குழு உட்பட  பல முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டார். பல முக்கிய போராட்டங்களை வழிநடத்தினார். பங்கேற்றார்.

சிறு ஊசலாட்டம் கூட இல்லாத போராட்ட வாழ்வு

வாச்சாத்தியில் பழங்குடி இன மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதலில் தோழர் மைதிலிஅவர்கள் அது தொடர்பான ஆணையத்திடம் மிக வலுவாகக் கொடுத்த புகாரும் தலையீடும்தான் தேசம்விடுதலை பெற்று பல ஆண்டுகளுக்கு பின்னரும் பழங்குடியினமக்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர் என்பதை வெளி உலகம் தெரிந்துகொள்ள வழிவகுத்தது மட்டுமல்ல;குற்றவாளிகளுக்கு தண்டனையையும் பெற்றுத் தந்தது.தலித் விவசாய தொழிலாளர்களின் கீழ்வெண்மணி பிரச்சனையாக இருந்தாலும் வாச்சாத்தி பழங்குடியின மக்களின் பிரச்சனையாக இருந்தாலும் பின்னர் தொழிற்சங்கப் பணியாக இருந்தாலும் அத்துணை பன்முகத்தன்மை கொண்ட பணிகளிலும் அர்ப்பணிப்புத் தன்மையுடன் தோழர் மைதிலி பணியாற்றினார். பின்னர் கட்சி வழிகாட்டுதல்படி மாதர் இயக்கத்திலும் மிக மிக சிறப்பாகப் பணியாற்றினார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக பரிணமித்தார். அவரது வாழ்வு மக்களின் முன்னேற்றத்துக்காக இடைவிடாத தொடர்ச்சியான உக்கிரமான போராட்ட வாழ்வாகவே அமைந்தது. ஒரு முறை கூட அவருக்கு தான் தேர்ந்தெடுத்த மார்க்சியப் பாதையில் ஒரு சிறு ஊசலாட்டம் கூட ஏற்பட்டது கிடையாது. தான் செயல்பட்ட கடைசித் தருணம்வரை அவர் மிகத் தெளிவாகவும் ஈடுபாட்டுடனும் சிறப்பாகவும் தனது பணியை செய்தார் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

அபூர்வ செயற்பாட்டாளர்

அவர் தனது பணியில் திறனுடனும் திறமையுடனும் செயல்பட்டார்.இந்த இரண்டு குணங்களும் சேர்ந்துஇருப்பது என்பது இன்னொரு அபூர்வம். அத்தகைய அபூர்வ குணத்தை தோழர் மைதிலி பெற்றிருந்தார். நீங்கள் திறன் உடையவராக இருக்கலாம். ஆனால் திறமைஇல்லை எனில் அந்த திறனால் பயன்இல்லை. நீங்கள் திறமை உள்ளவராக இருக்கலாம். ஆனால் செயல் திறன் இல்லை எனில் உங்கள் திறமையினால் எவ்விதப் பலனும் இல்லை. தோழர் மைதிலி அவர்கள் இந்த இரண்டு குணங்களையும் தனது செயலில் ஒருங்கிணைத்த அபூர்வ செயற்பாட்டாளர். அத்தகைய ஒருவரின் மறைவு என்பது ஜனநாயக இயக்கத்துக்கு பேரிழப்பு. குறிப்பாக இந்த தருணத்தில் இந்த இழப்பு இன்னும் சோகமானது. ஏனெனில் மிகக் கடுமையான போராட்டங்களுக்கு இடையேநாடு உள்ளது. எதிர்வரும் நாட்களில்இந்த போராட்டம் இன்னும் தீவிரமாகும் சூழல்தான் உள்ளது. இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் நமக்கு தோழர் மைதிலி அவர்களின் வாழ்வும் பணியும் மிகப்பெரியஉத்வேகமாக அமையும்.தோழர் மைதிலி சிவராமன் அவர்களுக்கு எனது செவ்வணக்கம்!

ஜூன் 8 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இணைய வழியில் நடத்திய “தோழர் மைதிலி சிவராமன் நினைவேந்தல்” நிகழ்ச்சியில் ஆற்றிய உரையிலிருந்து...

கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழில் சுருக்கம்: அ.அன்வர் உசேன்
 

;