tamilnadu

img

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் லட்சக் கணக்கில் இழப்பு – கான்ட்ராக்டர் தற்கொலை  

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சம் இழந்ததால் கான்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை அடுத்த மணலியை சேர்ந்தவர் நாகராஜ்(37). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு வரலட்சுமி என்கிற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக நாகராஜன் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

வழக்கம் போல ஆரம்பத்தில் வருமானம் வந்ததால் நாகராஜனுக்கு ஆர்வம் அதிகமானது. நாளடைவில் வேலைக்கும் போகாமல் கடன் வாங்கியும் நகைகளை அடமானம் வைத்தும் ரம்மி ஆடி வந்துள்ளார். இதனால், நாகராஜ் மற்றும் அவரது மனைவி வரலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பணம் வாங்கி ரம்மி ஆடியதால் ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.  

இந்நிலையில் இன்று அதிகாலை மனைவி வரலட்சுமி எழுந்து பார்த்தபோது, நாகராஜ் அவரது அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களது உதவியுடன் கணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் ஏற்கனவே நாகராஜன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் நாகராஜன் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை செய்ததில், அவர் எழுதிய கடிதம் கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சம் இழந்து கடனாகி விட்டது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதியிருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;