tamilnadu

img

கரம் கோர்ப்போம்! மெட்ரோ போராட்டத்திற்கு உரம் சேர்ப்போம்! - அ.சவுந்தரராசன்

“சென்னை மெட்ரோவில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் தனித்த உயர்வான தொழில்நுட்பத்தில்  பயிற்சியளிக்கப்பட்டவர்கள். மெட்ரோ தொழில் குறித்து முக்கியமான சிறப்பு வழிகாட்டல்கள் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த வேலையை சாதாரண தொழிலாளர்களால் செய்ய முடியாது. நிரந்தர ஊழியர்கள் 6 மாத காலத்திற்கு இயக்கம், சிக்னல், பெட்டிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பலவற்றில் பயிற்சியளிக்கப்பட்டவர்கள். அதற்கு பிறகு 6 மாத காலம் இயக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் தங்கள் தகுதியை நிரூபிப்பதற்கான போட்டித்தேர்வு எழுதப்பட்டு அமர்த்தப்படுகிறார்கள். இந்தப்பயிற்சிகளை  பெறாதவர்கள் பலதரப்பட்ட பிரிவுகளிலும் பணியாற்ற முடியாது. இதேபோல் இளநிலைபொறியாளர்களும், தொழில்நுட்பஊழியர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளையும், பொறுப்புகளையும் தனித்த உயர்வான தொழில்நுட்பத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சி அடிப்படையில் நிறைவேற்றுவார்கள். இதை சாதாரண தொழிலாளர்களால் செய்ய முடியாது”

சென்னை மெட்ரோ ரயில் மாநகரின் மாண்பு களில் ஒன்று. இது மிகவும் நவீனமான தொழில் நுட்பங்கள் கொண்டது. தனித்திறமையும், பயிற்சியும் பெற்றவர் ஊழியர்கள்தான் இந்த நிறுவனத்தில் விபத்துக்கள் இல்லாமல் பணியாற்ற முடிவும். நிர்வாகம் தொழிலாளர் துறைக்கு கொடுத்த ஒரு எதிர் மனுவில் கூறியுள்ளதைப் பாருங்கள்.
பழிவாங்கும் போக்கு
ஆனால் இதே நிர்வாகம் மேலே கூறியவற்றிற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது. ரயில் ஓட்டுநர், நிலைய கட்டுப் பாட்டாளர், போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், தொழிலநுட்ப ஊழியர்கள், தொழிலாளர்கள் போன்ற பிரிவுகளில் உரிய பயிற்சியோ, உரிமங்களோ இல்லாதவர்களை ஒப்பந்த முறை யில் பணியமர்த்தி வேலை வாங்குகிறது. பயிற்சி பெற்ற நிரந்தர தொழிலாளர்களை பார்க்கிங். தூய்மை பராமரிப்பு போன்ற வேலைகளில் பழிவாங்கும் நோக்கத்தில் ஈடுபடுத்தி வருகிறது. இதனால் மெட்ரோ ரயில் இயக்கத்தின் மீது பேராபத்து தொங்கிக்கொண்டு இருக்கிறது. பயணிகளின் உயிருக்கு ஊறு நேர்ந்திடுமோ என்ற அச்சம் நேர்ந்துள்ளது. கான்ட்ராக்ட் காரர்களுக்கு நிறுவனம் ஊழியர்களுக்கான ஊதியமாக தருகிற பணத்தில் கால்பங்கினைக் கூட கான்ட்ராக்டர்கள் ஊழியர்களுக்கு வழங்குவதில்லை. இதில் பெரும்மோசடி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்தியாவில் வேறு எந்த மெட்ரோ ரயில் நிறுவனத்திலும் நிரந்தர தன்மையுள்ள பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமர்த்தப்பட வில்லை.ஆனால், சென்னையில் மட்டும் இது நடப்பதற்கான சிறப்புக் காரணம் என்ன என்ற கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டும். ஒப்பந்தமுறை கொள்ளை பற்றி பொது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
3 நாள் வேலைநிறுத்தம்
தனித்திறமைகளும், பயிற்சிகளும் பெற்ற நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியத்தில் 35 சதவீத அலவன்சுகளை நிர்வாகம் வெட்டியது. 20 அரைச் சம்பள விடுப்புகளை ரத்து செய்தது. 15 நாட்கள் தந்தமை விடுப்பை மறுத்தது. பெற்று வந்த ஊதியத்தையும் சலுகைகளையும் தன்னிச்சையாக நிறுத்துவதற்கு எந்த நிறுவனத்திற்கும் உரிமையில்லை. ஆனால், மெட்ரோ நிர்வாகம் எல்லா சட்டங்களுக்கும் மேம்பட்ட தாக தன்னை கருதிக் கொண்டு செயல்படுகிறது. தொழிலா ளர்கள் சங்கம் அமைப்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை. இதையும் ஏற்க மறுத்து சங்கத்தை அழிக்கும் முயற்சி களை நிர்வாகம் மேற்கொள்கிறது. ஒட்டுமொத்தமாக 7 நிர்வாகி களை வேலைநீக்கம் செய்தார்கள். இதை எதிர்த்து 2019 ஏப்ரல் 29, 30, மே-1 தேதிகளில் வேலைநிறுத்தம் நடந்தது.  துணைத் தொழிலாளர் ஆணையர் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் 7 பேர் வேலைநீக்கத்தை மேல்முறையீட்டில் சாதகமாக முடிக்க வேண்டும் என்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கப் பட்டது. இதை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட் டது. ஆனால் இந்த அறிவுரைக்கு மாறாக அத்தனை தொழி லாளர்களுக்கும் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டுள் ளது. 9 பேர் இடைநீக்கத்தில் உள்ளனர். 6 பேர் மீது ஆண்டு ஊதிய உயர்வை 6 வருடங்களுக்கு தொடர்விளைவுகளோடு ஒத்திவைத்து தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எல்லோ ருக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்று மிரட்டி வரு கிறது. தொழிலாளர் குடியிருப்பில் உள்ளவர்களை வெளி யேற்றுவதற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வெறித்தனமான உச்சகட்ட பழிவாங்கலில் சட்டவிரோதமாக மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
சட்டமீறல்கள்
அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் நிலையாணை கள் சட்டம், பிழைப்பூதியச் சட்டம், பண்டிகை விடுமுறை சட்டம், தொழிற்தகராறுகள் சட்டம், சம்பள பட்டுவாடாச் சட்டம் போன்ற எந்த சட்டத்தையும் பின்பற்றவில்லை. தனது ராஜ்ஜியம் தனி ராஜ்ஜியம் என்று இறுமாப்போடு சட்ட மீறல்களை செய்து வருகிறது. தொழிலாளர் துறையை அறவே மதிப்பதில்லை. சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள யாரும் வருவதில்லை. எனவே, சிஎம்ஆர்எல் எம்பிளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த அறிவிப்பை வழங்கியுள்ளது. 25ஆம் தேதிக்கு பிறகு எந்த தேதியிலும் வேலைநிறுத்தம் செய்வோம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடக்கப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தைகளிலும் உரிய அதிகாரி கள் கலந்து கொள்ளவில்லை.ஆகவே பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையை நிலைநாட்ட மெட்ரோ தொழிலா ளர்கள் பின்னால் திரண்டாக வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டுமென்று விரும்புகிற ஒவ்வொருவரும் மெட்ரோ நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து முறியடித்தாக வேண்டும். நிரந்தரத் தன்மையுள்ள வேலையில் மட்டுமல்ல, சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிற வேலைகளிலும் கூட ஒப்பந்தத் தொழிலாளர்களை புகுத்துகிற அநீதியை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு உழைப்பா ளியின் கடமை. கரம் கோர்ப்போம். மெட்ரோ தொழிலா ளர்களின் போராட்டத்திற்கு உரம் சேர்ப்போம்.

கட்டுரையாளர் : தலைவர், சிஐடியு மாநிலக்குழு

சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் ஆறு ஆண்டுகளாக ஒரே பணியில் தொடர்கிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது என்கிற நடைமுறை இவரது விஷயத்தில் மீறப்படுவதன் மர்மம் என்ன? ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிட்டுள்ள திட்டப்பணிகளும் இவருடைய தனிச்சிறப்பான கைவேலைகளும்தான் அதற்கு காரணமா? தமிழகத்தின் தொழில்துறை அமைச்சரும், முதலமைச்சரும் விளக்கம் தருவார்களா?

 

;