tamilnadu

img

தமிழக மருத்துவர்களுக்கு அவமதிப்பு.... கனிமொழி எம்பி கண்டனம்

சென்னை:
மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச் சகத்தின் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. அதில் நாடு முழுவதிலுமிருந்து 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அதில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.இந்த நிகழ்ச்சியின்போது மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் ராஜேஷ் கொட்டேச்சா இந்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர், “எனக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது. இந்தி தெரியாதவர்கள் பயிற்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம்” என்று மூன்று நாள் வகுப்பிலும் தொடர்ந்து இதையே கூறியுள்ளார்.மேலும் ஆத்திரமடைந்த கொடேச்சா,‘‘எவருக்கேனும் இந்தி புரியவில்லை என்றால், அவர்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும். இந்தி புரியாதவர்கள் தொடர்ந்து பிரச்சனை செய்தால் அவர்கள் மீது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டரில், “மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத் தக்கது.மத்திய அரசு, உடனடியாக அந்தச் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ளப்போகிறோம்?” எனப் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், “ஆயுஷ் பயிற்சி முகாமில் இந்தியை திணித்து, தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து,”இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.

;