tamilnadu

img

மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள்... கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

தூத்துக்குடி:
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டு, தனிமைப்ப டுத்தப் பட்ட வார்டு ஆகியவற்றை கனிமொழி எம்.பி. சனியன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அரசு மருத்துவமனைக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை போதுமான அளவு செய்யப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

இதனை அரசு  கருத்தில் கொண்டு, போதிய ஆய்வகங்களை அமைத்து, பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தயாராக இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதேபோன்று அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை போதுமான அளவு அரசு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார். .