tamilnadu

செய்தித் துளிகள்

தீ விபத்து

சென்னை திருமங்கலத்தில் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 15மாடிகளை கொண்ட ஏ,பி.சி.டி என்று நான்கு பிளாக்குகளில் சுமார் 1000குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் திங்களன்று (ஜூலை 13) அதிகாலை சி மற்று டி பிளாக்குகளின் தரைத்தளத்தில் மீட்டர் பாக்ஸ் அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீயானாது கொழுந்து விட்டு எரிந்து முதல் தளத்திற்கும் பரவியது. இதனையறிந்து குடியிருப்புவாசிகள் அலரியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். இதனையறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அவசர உதவிக்காக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தும் கடைசி வரை வரவில்லை. இது குறித்து திருமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட 1283 வீடுகள்

சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனாம்பேட்டை மண்டலத்தில் 752 தெருக்களில் 1283 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

காய்கறி சந்தை மாற்றம்

சென்னையில் உள்ள 89 காய்கறி சந்தைகளை மாநகராட்சி மண்டல அதிகாரி தலைமையிலான குழுக்கள் தனிதனியாக கண்காணித்து வருகின்றன. தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கொத்த
வால்சாவடி காய்கறி சந்தையில் மக்கள் கூடியதால் சந்தை தற்காலிகமாக மூடபட்டது. இந்நிலையில் கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்தில் திங்கள் (ஜூஐல 13) முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு 120 க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தைக்குள் வாகனங்களும், முகக்கவசம் அணியாதவர்களும் அனுமதிக்கப்படவில்லை.

கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர் வீட்டில் 70 சவரன் நகை 2 லட்ச ரூபாய் மற்றும் 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

கைது

வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் அடுத்த ஊனை கிராமத்தைச் சேர்ந்த பிரேம்நாத் என்ற விவசாயியிடம் மின் இணைப்பு வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்சாரவாரிய இளநிலை பொறியாளர் ஜெயசங்கர் என்பரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

சாலை மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொருட்கள் வழங்காதே

புதுச்சேரியில் கடைகளுக்கு முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டாம் என்று கடை உரிமையாளர்களிடம் காவல் துறை கண்காணிப்பாளர் ரங்கநாதன் அறிவுறுத்தினார்.

தப்பி ஓடிய கைதி கைது

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கர்ப்பிணி கைதி கும்மிடிபூண்டியில் பிடிபட்டார். இது தொடர்பாக பெண் சிறைக்காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.