தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் 25ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வ மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜூன் 22-ஆம் தேதி திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், ஜூன் 23-இல் திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோன்று, ஜூன் 22, 23-ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை, இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.