tamilnadu

கொரோனா விவகாரத்தில் அரசு தோல்வி: சட்டப்பேரவையில் திமுக குற்றச்சாட்டு

சென்னை:
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

கொரோனா தொற்று காரணமாக போதிய இடவசதிகள் இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய  சட்டப்பேரவை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் செவ்வாயன்று நேரம் இல்லாத நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றியஎதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,  “கொரோனா தொடர்பான மரணங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. அரசு 
அமைத்த குழுவின் அறிக்கை என்ன ஆனது?  கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப் பட்டுள்ளதா?  மருத்துவர்களுக்கு ரூ.50  லட்சம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை முறையாக வழங்கப்பட்டுள் ளதா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் படுமோசம் அடைந்து விட்டதால்  வெள்ளை அறிக்கை விட வேண்டும்,ஒவ்வொரு குடும்பத்துக்கும் தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும்” என்றார். ஆளுங்கட்சி தரப்பில் உரையாற்றிய பரமசிவம் அரசின் நடவடிக்கைகளை பட்டியலிட்டு அதோடு பாராட்டினார்.அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், “கொரோனாவுக்கு தமிழக அரசு ரூ.7,167.97 கோடி செலவை செய்துள்ளதாக கூறினார்.நிவாரண தொகைக்கு ரூ.4,896.05 கோடியும், தனிமைப்படுத்தலுக்கு ரூ.262.25 கோடியும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க ரூ.830.60 கோடியும், மருத்துவ கட்டுமான பணிக்கு ரூ.147.10 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு ரூ.638.85 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

;