tamilnadu

img

கொரானா பீதியைப் போக்க நல்லெண்ண குழுக்கள் : சிபிஐ கோரிக்கை

சென்னை ஏப்.11-
தமிழகத்தில் கொரானா தொற்று வேகம் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பயத்தை போக்குவதற்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது:-
உயிர்க் கொல்லி தொற்று நோயான கோவிட் 19 இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பது பொது மக்களுக்கு அச்சமும், பதற்றமும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து முடக்கப் பட்டிருப்பதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் பெரும் பகுதி மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு சில நிவாரண உதவிகளை வழங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த இயற்கை பேரிடரைச் சமாளிக்க உடனடியாக ரூ. 12 ஆயிரத்து 200 கோடி கொடுத்து உதவுமாறு மத்திய அரசிடம் மாநில அரசு திரும்பத் திரும்ப வலியுறுத்தியும் மிகக் குறைந்த நிதியை ஒதுக்கியுள்ளது.
இதனால் மாநில அரசு தனது நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். முதலமைச்சர்கள் காணொலி மாநாட்டிற்குப் பிறகு நாட்டின் முடக்க நிலை நீடிக்கும் என்ற அறிவிப்பு வெளியாகும். இந்தச் சூழலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலவரம் கடுமையாகி வருகிறது என்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

எனவே வேலை இழந்த தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளோர், நல வாரியங்களில் பதிவு செய்து கொள்ளாமல் விடுபட்டோர், சாலையோர வியாபாரம் செய்வோர் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், சுய தொழில் செய்வோர் போன்ற அன்றாட வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருவோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.நியாய விலைக் கடைகளில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப் படும் விலையில்லா உணவுப்  பொருள்கள் மே, ஜூன் மாதங்களுக்கும் நீடிக்க வேண்டும்.  
விவசாயிகளின் விலை பொருட்களை நியாய விலையில் கொள்முதல் செய்து, பொது மக்களுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும். இதில் நடைபெறும்  வர்த்தக சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். முக்கியமானதும், முன்னுரிமை பெறுவதும் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள பீதி, பதற்றத்தைத் தணிக்க வேண்டிய பணியாகும். இதனை ஏதோ ஆளும் கட்சி மட்டுமே செய்து விட முடியாது.  பல்வேறு மட்டங்களில் மூன்று, மூன்று பேர் கொண்ட ‘தன்னம்பிக்கை - தைரியப்படுத்தும் நல்லெண்ணக் குழுக்கள்‘ அமைத்து, செயல்படும் எல்லைகளைப் பிரித்துச் செயல்படுத்துவது அவசியமாகும்.மேற்கண்ட கோரிக்கைகள் மீது முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

;