சென்னை:
தரணி சர்க்கரை ஆலைகளிடம் கரும்பு பணப்பாக்கியை மாநில அரசு பெற்றுத்தரக் கோரி அக்டோபர் 8 அன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் இயங்கி வரும் தரணி சர்க்கரை ஆலைகள் 2018-19ல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அரைத்த கரும்புக்கு, போளூர் தரணி ஆலை - ரூ.27.17 கோடி, சங்கராபுரம் தரணி - ரூ.26.87 கோடி, வாசுதேவநல்லூர் தரணி- ரூ.23.80 கோடி என மூன்று ஆலைகள் ரூ.77.84 கோடி பாக்கி வைத்துள்ளனர். கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 14 நாட்களுக்குள் தர வேண்டிய கரும்புக்கான பணத்தை தரணி சர்க்கரை ஆலைகள் இரண்டு ஆண்டுகளாக தரவில்லை. கரும்பு பணம் வராததால் வாங்கிய கடனை கட்ட முடியாமலும் புதிய கடனை வாங்க முடியாமலும் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தரணி சர்க்கரை ஆலைகள் கரும்புபணப்பாக்கியை தராததால் பத்தாயிரம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்க்கரை ஆலை தொழிலாளர் களுக்கு எட்டு மாதங்களாக சம்பளம் தரவில்லை. கரும்பு விவசாயிகள் இரண்டு வருடங்களாக சர்க்கரை ஆலை முன்பும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கரும்பு பணத்தை கேட்டு பலகட்ட போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாடு கரும்புவிவசாயிகள் சங்கத்தின் தலைமையில் கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்திய போது திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் வரிவசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கரும்பு பண பாக்கியை பெற்றுத்தருகிறோம் என்று கூறினர். இப்போது கேட்டால் தரணி ஆலையில் சர்க்கரை, மொலாசஸ் எதுவும்இருப்பு இல்லை; எதை எடுத்துவிற்றுத் தருவது என்று அதிகாரிகள்கூறுகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக தரணி ஆலை முதலாளி பெரியசாமி இருப்பதால் அதிகாரிகள் சட்டப்படிஎந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 2018-19ல் தர வேண்டிய ரூ.77.84 கோடி பாக்கி தவிர 2013-14 முதல் 2016-17 வரை நான்கு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையையும் (எஸ்.ஏ.பி) தரணி ஆலை தர வில்லை.
போளூர் தரணி ஆலை - ரூ.60.33 கோடி, சங்கராபுரம் தரணி - ரூ.76.92 கோடி, வாசுதேவநல்லூர் தரணி - ரூ.26.09 கோடி ஆகியவை 2013 முதல் 2017 வரை எஸ்.ஏ.பி. பாக்கி வைத்துள்ளன.நான்கு ஆண்டுகால எஸ்.ஏ.பி. பாக்கி ரூ.163.34 கோடி விவசாயிகளுக்கு தரணி சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்துள்ளன. மாநிலஅரசு அறிவித்த விலையை விவ சாயிகளுக்கு பெற்றுத்தரவில்லை. தரணி சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு பணப்பாக்கி ரூ.241.18 கோடியை மாநில
அரசு பெற்றுத்தரக் கோரி, தொழிலாளர்களின் சம்பளபாக்கி முழுவதையும் வழங்கக் கோரி போளூர்,சங்கராபுரம் தரணி ஆலைகளின் கரும்பு பயிரிடும் பகுதிகளை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மாற்றி ஒப்படைத்திடக் கோரி அக்டோபர் 8 ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கருப்புக்கொடிகளுடன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.