tamilnadu

img

நான்கு வழிச்சாலைக்காக வெட்டி வீழ்த்தப்படும் பனை மரங்கள்.... இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் அதிருப்தி....

விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்பையும் கண்டு கொள்ளாமல் நிறைவேற்றப்படும் நான்கு வழிச்சாலை பணிக்காக தற்போது ஆயிரக்கணக்கான பனைமரங்கள் வெட்டப்படுவதற்கு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சட்டவிதிகளை மீறி, சுற்றுச்சூழல் ஆணையத்தை ஏமாற்றி, விவசாயிகளை மிரட்டி விளைநிலங்களை அபகரித்து விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 179 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.4 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில், சொற்பவிலை கொடுத்து வாங்கி விவசாய நிலங்களைஅழித்து, அப்பாவி ஏழைகளின் குடியிருப்பு களை அகற்றிவிட்டு அவ்வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு அடிப்படை வேலைகள் கடந்த 2017-ல் துவங்கின.விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, அவர்களை ஏமாற்றி, சாலை அமைக்கும் பணிக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் வேகமாய் நடந்து வந்தன. நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக நகாய் அதிகாரிகள், விவசாயிகளை மிகவும் இழிவாக நடத்துவதாக ஆரம்பம் முதலே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி னர்.

சுற்றுச்சூழல் ஆணையத்தை ஏமாற்றும் விதமாக விழுப்புரம் முதல் புதுச்சேரி, புதுச்சேரிமுதல் பூண்டியாக்குப்பம், பூண்டியாக்குப்பம் முதல் சட்டநாதப்புரம், சட்டநாதப்புரம் முதல் நாகப்பட்டினம் என நான்கு பகுதியாக பிரித்துசட்ட விரோதமாக பணிகளை செய்ய துவங்கியது. இதில் கொள்ளிடம் முதல் நாகப்பட்டினம் வரையிலான என்ஹெச்45ஏ (NH45A) சாலை பணிக்கு  விவசாயிகளிடம் உள்ள விவசாய நிலங்களை மிரட்டி வாங்கியது.கொள்ளிடம், சட்டநாதபுரம், கோபாலசமுத்திரம், புத்தூர், எருக்கூர், விளந்திடசமுத்திரம், தடாளன்கோவில் பகுதி, செங்கல்மேடு, காத்திருப்பு, நாங்கூர், செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், இராதாநல்லூர், ஆலங்காடு, சங்கிருப்பு, பூந்தாழை, மாமாகுடி, ஆக்கூர்,பண்டாரவடை, ஸ்ரீநகர், நடராஜன்பிள்ளை சாவடி, அன்னப்பன்பேட்டை, திருக்கடையூர், சிங்கானோடை, காழியப்பநல்லூர், அனந்த மங்கலம், பொறையார் வழியாக அமைக்கப்பட உள்ள 4 வழிச்சாலைக்காக பல லட்சம் ஏக்கர் நிலங்களை அரசு விவசாயிகளிடமிருந்து மிரட்டியும் வலுக்கட்டாயமாகவும் கையகப்படுத்தியது.

ஆரம்பக் கட்டத்தில் இச்சாலைக்காக எதிர்ப்பு தெரிவித்த பல விவசாயிகள் அரசின் அடக்குமுறை, மிரட்டல் போக்கால் வேறு வழியின்றி தங்களது வாழ்வாதாரமாக இருக்கும் விளைநிலங்களை அரசிடம் விருப்பமின்றி ஒப்படைத்தனர்.இதனிடையே பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வழிச்சாலை பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு துரிதமாக நடைபெறும் நிலையில், அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், என்.என்.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. 

திடீரென மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்துள்ள விவசாயிகள், இயற்கைஆர்வலர்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன் உள்ளிட்டோர், மாற்றுப்பாதையில் பணிகளை செய்ய வாய்ப்பிருந்தும் விளைநிலங்களை அழித்து, தற்போது மரங்களை வெட்டி பணிகளைமேற்கொள்ள இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்களை அப்பகுதியில் நட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையெல்லாம் ஓரு பொருட்டாக நினைக்காத நகாய்அதிகாரிகள், இடையூறு இல்லாத மரங்களை யும் வெட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

சாலையோர மரங்களை வெட்டரூ.85 லட்சம் ஒதுக்கீடா?
நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தை துரித கதியில் செயல்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் கொள்ளிடம் முதல் அனந்தமங்கலம் வரை ஆங்காங்கே கிட்டத்தட்ட29 கிலோமீட்டர் தொலைவுக்கு ஏற்கனவே இருக்கிற சாலையை இருபுறமும் சராசரியாக பத்துமீட்டர் அளவிற்கு அகலப்படுத்தியுள்ளனர். இப்பணிகளை இ.கே.கே என்கின்ற ஒப்பந்த நிறுவனம் செய்கிறது. கிட்டத்தட்ட 20-லிருந்து 30 பாலங்களை புதிதாக கட்டி 10 மீட்டர் அளவிற்கு சாலையை புதிதாக அமைத்துவருகின்றனர். மொத்தத்தில் 400,500 கோடிரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே 4,500 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை திட்டம் நடைபெற இருக்கும் போது மக்களின் வரிப்பணத்தை வீண்செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏன்? சாலையில் இருக்கின்ற மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மட்டும் ரூ.85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் பரவி வருகிறது.

செ.ஜான்சன், தரங்கம்பாடி

;