tamilnadu

img

சாதிச்சான்று வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50,000 அபராதம்

சென்னை:
மாநில அளவிலான விசாரணைக் குழு உத்தரவிட்டும், வங்கியில் வேலை கிடைத்த பெண்ணுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழை வழங்காத தருமபுரி வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் சின்னகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் குறிச்சான் என்ற எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்கள்.  தங்களது மகள் மற்றும் 2 மகன்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் கேட்டு தருமபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, மாநில அளவிலான பரிசீலனை குழுவை ஜெயலட்சுமி அணுகினார். இதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தவும், மானுடவியல் நிபுணர் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.\

இதன்படி நடந்த விசாரணை அறிக்கைகளின்படி, ஜெயலட்சுமி குறிச்சான் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று பரிசீலனை குழு அறிவித்தது. ஆனாலும், அவருக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் சாதி சான்றிதழை வழங்கவில்லை.இந்த நிலையில், ஜெயலட்சுமியின் மூத்த மகள் சந்தியாவுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்தது. வங்கி நிர்வாகம் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கும், மகள், மகன்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் கோட் டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மகளுக்கு பணி வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.\

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர், ‘மனுதாரர் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர் தான் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,மானுடவியல் நிபுணர் விசாரணை அறிக்கைகள் அளித்த பின்னரும் ஏன் சாதி சான்றிதழ் வழங்கவில்லை? இதற்காக வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாதா?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான ஜெயபிரகாஷ் நாராயணன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியராக இருந்த தேன் மொழி அண்மையில் மாற்றப்பட்டு, அவர் வகித்த பதவிக்கு தணிகாசலம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், இதுகுறித்து விசாரிக்க கால அவகாசம் வேண்டும்‘ என்றார்.இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. ‘மாநில அளவிலான ஒரு குழு மனுதாரர் எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர் தான் என்று முடிவு செய்த பின்னர், மனுதாரர் என்ன சாதியை சேர்ந்தவர்? என் பது குறித்து விசாரிக்க தாசில்தாருக்கு வருவாய் கோட்டாட்சியர் எப்படி உத்தரவிடுவார்?மாநில அளவிலான குழுவை விட தாசில்தார் அதிகாரமிக்கவரா?’ என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.பின்னர், ‘சாதி சான்றிதழ் வழங் காத வருவாய் கோட்டாட்சியர் தேன் மொழிக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கின்றோம். இந்த தொகையை அவர் உடனடியாக சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும்.

மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். அவ்வாறு சான்றிதழ் வழங்கவில்லை என்றால், அவருக்கும் வழக்கு செலவு விதிக்கப்படும். வழக்கு திங்கட்கிழமைக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்.திங்களன்று வருவாய் கோட் டாட்சியர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

;