tamilnadu

img

பாசிஸ்டுகள் ராஜினாமா செய்ய மாட்டார்கள்... அவர்களை விரட்டியடிக்க வேண்டும்... சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு....

சென்னை:
பாசிஸ்டுகள் ராஜினாமா செய்ய மாட்டார்கள், அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் கூறினார்.சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசிகளை இஸ்ரேலின் பெகாசஸ் வேவு செயலியின் மூலம் உளவு பார்த்த பாஜக மோடி அரசை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் சனிக்கிழமை (ஜூலை 24) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசியை பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் வேவு பார்த்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட் பது, வேவு பார்ப்பது சட்டத்திற்கு விரோதமானது, மனித உரிமைக்கு, கருத்து சுதந்திரத்திற்கும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது.  நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து இதை ஆய்வு செய்து, சம் பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மோடி அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக இதை நாங்கள் செய்யவில்லை எனக் கூறுகிறார்கள். சட்ட விரோதமாக வேவு பார்க்கக் கூடிய ஒன்றிய அமைச்சர்கள் இதை மறுக்கிறார்கள்.

ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு அந்த மென்பொருளை நாங்கள் விற் பனை செய்ய மாட்டோம் என்றும், இதுவரை 50 நாடுகளிடம் விற்பனை செய்திருக்கிறோம் என இஸ்ரேல் அரசு தெளிவாக கூறிவிட்டது. ஒன்றிய மோடி அரசு நாங்கள் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் போடவில்லை, மென்பொருளை வாங்கவில்லை என்று இதுவரை மறுக்கவில்லை. 2017ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பிரதமர் செல்வதற்கு முன்னதாக அவருடைய பாதுகாப்பு ஆலோசகர் அஜில் ஜோவல் இஸ்ரேல் செல்கிறார். பின்னர் மோடி செல்கிறார்.   இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இஸ்ரேல் அரசு இந்த மென் பொருளை இந்திய அரசுக்கு விற்பனை செய்துள்ளது. ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் முன்பு எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப் பட்டது. 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு கடந்த 7 ஆண்டுகாலமாக அவர்களுடைய இலக்கான இந்துத்துவாவை அடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போதைய ஒன்றிய மோடி அரசை கார்ப்பரேட் நிறுவனங்களும், இந்துத் துவா சக்திகளும் இணைந்து நடத்துகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், இந்துத்துவா நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதிதான் இப்படி வேவு பார்ப்பது, ஒட்டு கேட்பது என்பதை மறந்து விடக்கூடாது. அனைவரும் மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். பாசிஸ்டுகள் இதுவரை ராஜினாமா செய்ததாக வரலாறு இல்லை. எனவே அவர்களை விரட்டி அடிக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை அனைத்து ஜனநாயக அமைப்புகளும், மதச்சார்பற்ற சக்திகளும் தொடர்ந்து நடத்த வேண்டும் என அறைகூவல்விடுத்தார்.

தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, பேசுகையில், மோடி அரசுக்கு எதிராக பற்ற வைத்திருக்கும் சிறிய தீப்பொறி தான் இந்த ஆர்ப்பாட்டம். நீட்தேர்வுக்கு எதிராக, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, சுற்றுச் சூழலுக்கு எதிராக  என தனித்தனியே போராடுவதை விட்டுவிட்டு மோடியே பதவி விலகு என ஒட்டுமொத்தமாக போராட வேண்டிய நேரம் வந்து விட்டது. நாடு மிகவும் ஆபத்தான நிலையில், ஒரு நெருக்கடியான சூழலில் சிக்கியிருக்கிறதுஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் முகத்திரையை கிழிக்கும்  ஜனநாயக சக்திகளை இந்த பெகாசஸ் செயலி மூலம் வேட்டையாடுகிறார்கள். இந்தியாவில் தேர்தலே நடத்தாமல் எமர்ஜென்சியை கொண்டு வந்து அரசியலமைப்பு சட்டத்தை அழித்து இந்த தேசத்தை இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் கனவுத் திட்டம். சாதி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி, மத வெறியைத் தூண்டி இந்து பெரும்பான்மையைக் காட்டி அவர்களது திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களது செயல்பாடு உள்ளது. இந்நிலையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சிந்தித்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. வேவு பார்ப்பது என்பது ஆபத்தானது என் பதை விட மிகவும் கேவலமானது. இதற்கு பொறுப்பேற்று மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

திருமுருகன் காந்தி
முன்னதாக திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் வேவு செயலியின் மூலம் இந்தியாவில் நீதிபதிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு வேவு பார்த்து இருக்கிறது ஒன்றிய மோடி அரசு. இந்த பெகாசஸ் வேவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித்ஷாவோ இதுவரை மறுக்கவில்லை. எனவே இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளது, ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டு உள்ளன. மக்களை பாதுகாப்பதற்கு பதில் மோடி, அமித்ஷாவின் அதிகாரத்தை பாதுகாக்கவே இதுபோன்ற செயல்களில் அரசு ஈடுபடுகிறது என்று குற்றம்சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தில் தெகலான் பாகவி (எஸ்டிபிஐ), மல்லை சத்யா (மதிமுக), குமரேசன் (திராவிடர் கழகம்), மு.வீரபாண்டியன் (சிபிஐ), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), ஜெயினுலாபுதீன் (மனிதநேய மக்கள் கட்சி), வேணுகோபால் (தமிழக வாழ்வுரிமை கட்சி), தபசி குமரன் (திராவிடர் விடுதலைக் கழகம்), சுந்தரமூர்த்தி (தமிழர் விடுதலைக் கழகம்), தீபக் (டிசம்பர் 3 இயக்கம்),குமரன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் (மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்) ஆகியோரும் பேசினர்.

;