tamilnadu

img

இன்று விவசாயிகள் போராட்டம்: வாலிபர் சங்கம் பங்கேற்கிறது...

சென்னை:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி செப்டம்பர் 25 அன்று விவசாயிகள் சங்கம் நடத்தும்  மறியல் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போது மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் உணவுப் பொருட்களை பதுக்குவதற்கும், அதன் விளைவாக விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். செயற்கையான உணவு பற்றாக்குறையை உருவாக்கும், பெரும்பான்மையான மக்கள் விலை உயர்வு காரணமாக உணவுப் பொருட்களை வாங்க இயலாத சூழல் ஏற்படும். மேலும் நியாயவிலைக் கடைகள் உட்பட பொது வினியோக முறையை முற்றிலுமாக அழிப்பதற்கு இந்த சட்டங்கள் வழிவகுக்கும்.
சிறு-குறு விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் மண்டியிட வைத்து ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக மாற்றி விடும்.எனவே மத்திய அரசின் இந்த எதேச்சதிகார போக்கு இந்தியாவை மேலும் மோசமான ஏற்றத்தாழ்வுகளுக்கு இட்டுச்செல்லும் .இத்தகைய கொடும் பாதகச் செயலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விரோதமான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி செப்டம்பர் 25 அன்று நாடு முழுவதும் விவசாயிகள் சங்கம் நடத்தும் சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில்  பங்கேற்று வெற்றியடையச் செய்ய வேண்டும்.

;