tamilnadu

img

பயன்படுத்தப்படாத ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டித்திடுக... தென்னக ரயில்வேக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை:
பயன்படுத்தப்படாத ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது:  கொரோனா நோய்த் தடுப்பையொட்டி மார்ச் 25 முதல் அமலாக்கப்பட்ட முதலாவது ஊரடங்கு காலம் முதல் இன்று வரை அனைத்து புறநகர் ரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் புறநகர்ரயில் சேவைகள் துவங்குவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிற மக்கள் பல்வேறு ரயில் நிறுத்தங்கள் இடையே பயணம் செய்கிற வகையில் மாதாந்திர ரயில்வே சீசன் டிக்கெட்டுகளை பெற்றிருக் கிறார்கள். ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரையிலான ரயில்வே சீசன் டிக்கெட் களுக்கான கட்டணங்களை முழுமையாக செலுத்தியே பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில் தொடர்ச்சியாக பல கட்டங்களாக அறி  விக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்களின் ரயில் போக்குவரத்தும் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. 

இதனால் பணம் கட்டி பெறப்பட்டிருந்த சீசன் டிக்கெட்களை பயன்படுத்த முடியாமல் போனதோடு அவற்றிற்கான காலமும் முடிவடைந்திருக்கிறது. பெரும்பாலும் சிறு வியாபாரம் செய்பவர்கள், முதியோர், மாணவர்கள் மற்றும் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் ஆகியோரே இந்த சீசன் டிக்கெட்டுகளை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் துவங்கும் போது ஏற்கனவே இவர்களுக்கு ரயில்வே சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாமல் போன காலத்திற்கு ஈடாக செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம். இது மிகுந்த நியாயமான கோரிக்கையாக இருக்கும் என்பதோடு, இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அனுபவித்த சொல்லொண்ணா துயரத்திற்கு ஈடு செய்கிற பேருதவியாக அமையும் என்றும் கருதுகிறோம்.

புறநகர் ரயில் சேவைகளை துவங்கு வதற்கான அறிவிப்பைச் செய்யும் அதே நேரத்தில், ரயில்வே சீசன் டிக்கெட் பயன்பாட்டுக்கான கால அளவை நீட்டிக்கச் செய்யும் வகையிலான அறிவிப்பினையும் செய்து மக்களுக்கு உதவிட வேண்டும். இந்தக்  கோரிக்கை உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் நம்புகிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;