tamilnadu

img

நடப்பு சட்டமன்றத் தொடரிலேயே தனிச்சட்டம் இயற்றி உத்தரவாதம் செய்க! கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை, பிப். 9 - காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே இதுதொடர்பாக தனிச்சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றி, இந்த அறிவிப்பை உத்தரவாதம் செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று சேலத்தில் ஞாயிறன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: விவசாய வளம் கொழிக்கும் காவிரி டெல்டாவை ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்கும் களமாக மாற்றுவதற்கு தொடர்ந்து திட்டங்களை மத்திய பாஜக அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா முழுவதும் உள்ள நிலப்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள கடல்பகுதியில் ஹைட்ரோ கார்பனும் மீத்தேனும் எடுப்பதற்காக பல கட்டத் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே இரண்டு கட்ட ஏலம் முடிந்து மூன்றாவது கட்ட ஏலம் நடந்துள்ளது. இதில் இந்தியா முழுவதும் 15லட்சம் ஹெக்டேர் அளவிற்கான நிலப்பகுதியை குறி வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் மரக்காணம் துவங்கி வேதாரண்யம் மற்றும் கடலூர் - புதுச்சேரி வரையிலும் இத்திட்டத்திற்கான இலக்குகள் நீள்கின்றன. தனியார் பெரும் கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவும் மத்திய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசியும் இந்த ஏலத்தை எடுத்துள்ளன. ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு சாதகமான முறையில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் முக்கியமான விதிகளை மாற்றியிருக்கிறது. இதன்படி இத்திட்டம் செயல்பட உள்ள பகுதிகளில் இதுவரை அவசியம் என்று கருதப்பட்ட மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற திட்டங்களை இரண்டு வகைகளாக பிரிக்கிறார்கள். ஒன்று மாநிலப் பட்டியல், மற்றொன்று மத்திய அரசுப் பட்டியல். இதை ஏ, பி பட்டியல் எனக் கூறலாம். எந்தவொரு திட்டத்திற்கு முன்பும் கட்டாயம் சுற்றுச்சூழல் ஆய்வும் அனுமதியும் தேவை என்பது ஏ பட்டியலில் இடம்பெற்றிருப்பவை; மற்றவை பி பட்டியலைச் சார்ந்தவை. இப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மேற்கொள்ளப்பட ஏலம் விடப்பட்டுள்ள காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளை ஏ பட்டியலிலிருந்து பி பட்டியலுக்கு மாற்றி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக டெண்டர் எடுத்திருப்பவர்கள் அந்தப் பணியை மிக எளிதாக செய்வதற்கு இதன் மூலம் உதவிட மத்திய அரசு முனைப்பு காட்டியுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து டெல்டா மாவட்டங்கள் முழுவதிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என மக்கள் இயக்கங்கள் வலுவாக நடந்துள்ளன. இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் முதலமைச்சர், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே வேளையில், மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் மாநில அதிமுக அரசு தீவிரமாக ஆதரித்து அமலாக்குகிற - மத்திய அரசுக்கு சேவகம் செய்கிற ஒரு அரசாகவே இருந்து கொண்டிருக்கிறது. எனவேதான் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பாக செயலாக்கம் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதை உறுதி செய்யும் விதத்தில், நடப்பு சட்டமன்ற தொடரிலேயே, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தனிச்சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். எந்தச் சூழலிலும் மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு இரையாகி பின்வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம். அதேபோல ஏற்கெனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்துளை எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டு, அந்த நிலையிலேயே இருக்கின்றன. அந்தப் பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதையும் தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;