சென்னை:
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜகவின் தேசிய தலைமைதான் அறிவிக்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். இவரின் பேச்சு அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்களை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் வெள்ளியன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் அறிவித்துள்ளோம். இந்த கூட்டணி அதிமுக தலைமையில் தான் அமையும். கூட்டணிக் கட்சிகள் இணைந்து முடிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் அது அவர்களின் உரிமை.எங்களைப் பொறுத்தவரை இந்த கூட்டணியில் பெருவாரியான தொகுதிகளில் அதிமுகதான் தேர்தலை சந்திக்கும் என்பதால், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் கூட்டணியின் முதல்வராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்தார். அமைச்சரின் பேட்டி பாஜகவுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.