tamilnadu

பெண் கொலை வழக்கில் ஓட்டுனருக்கு இரட்டை ஆயுள்

கடலூர், ஏப்.12-பெண் கொலை வழக்கில் வாகன ஓட்டுனருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ரவி-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள், இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள மறைவான இடத்திற்குச் செல்வதை அதே பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ் மகன் பிரகாஷ் (27) என்ற சரக்கு வாகன ஓட்டுநர் எட்டிப்பார்ப்பதும், அவர்களை கிண்டல் செய்வதும் வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனை, சித்ரா தட்டிக்கேட்டு வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி சித்ராவின் வீட்டின் அருகே பிரகாஷ் ஒளிந்துள்ளார். இதனைப் பார்த்த சித்ரா ஏன் இங்கே ஒளிந்திருக்கிறாய் என்று கேட்டபோது எப்போதும் என்னை கண்காணிப்பதும் கேள்வி கேட்பதுமே உனக்கு வேலையா போச்சு என்று கத்தியால் குத்தியுள் ளார். வலியால் கத்திய அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மகள் வினிதா (20), மருமகன் சீ.பாண்டிதுரை (25) ஆகியோர் சம்பவ இடத்திற்குச் வந்தபோது அவர்களையும் கத்தியால் பிரகாஷ் குத்தியுள்ளார்.இதில், பலத்த காயமடைந்த 3 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விழுப்புரம், புதுச்சேரி அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் சித்ரா இறந்துவிட்டார். இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங் கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. சித்ராவை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், பாண்டிதுரையை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனையும், வினிதாவை தாக்கிய வழக்கில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்புக் கூறினார். மேலும், பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தார்.இதனையடுத்து அவர் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டதாக அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் க.செல்வப்பிரியா கூறினார்.

;