tamilnadu

img

வழக்கு நிலுவையை காரணம் காட்டி ஓய்வு காலப் பலன்களை மறுக்காதே.... அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்.....

சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழக்கு நிலுவை என காரணம் காட்டி ஓய்வுகால பலன் களை வழங்க மறுப்பது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சம்மேளன தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் ஆகியோர் போக்குவரத்து துறை அரசு முதன் மைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிறுவனங்கள் சட்டப் படி பதிவுசெய்யப்பட்டு செயல்படக் கூடிய நிறுவனங்கள் ஆகும். இந்நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு நிலையாணைகள் சட்டம், பணிக்கொடை பட்டுவாடா சட்டம், வருங்கால வைப்புநிதி சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையிலேயே பலன்களை அளிக்க வேண்டும்.நிலையாணைகள் சட்டப்படி ஒரு தொழிலாளி ஓய்வுபெற்று விட்டால் அவருக்கும், நிறுவனத்திற்கும் தொழிலாளி, முதலாளி உறவு இல்லை, ஓய்வுபெற்ற தொழிலாளி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ அல்லது அவர் சம்பந்தமான வழக்குகளை காரணம் காட்டியோ அவரது ஓய்வுகால பலன் களை நிறுத்திவைக்க முடியாது.

பணிக்கொடை பட்டுவாடா சட்டப் படி பணி ஓய்வுபெற்று 30 நாட்களுக் குள் வழங்க வேண்டும். அதற்கு மேல் நிர்வாகம் காலம்தாழ்த்தி வழங்கினால் 10 சதவீத வட்டியுடன் சேர்த்து பணிக்கொடை வழங்க வேண்டும்.அதேபோல் வருங்கால வைப்புநிதி பணத்தை எந்த காரணத்தினாலும் பணி ஓய்வுக்குப்பின் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தி வைக்க முடியாது. பணிக்கொடை பட்டுவாடா சட்டம், வருங்கால வைப்புநிதி சட்டப் படி வழங்க வேண்டிய பணத்தை உரிமையியல் நீதிமன்றம் பறிமுதல் செய்யமுடியாது என சட்டங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது தொழிலாளர்கள் அவர்களுக்கு வழங்க வேண்டிய, பணப்பலன் கோரியோ அல்லது நிர்வாகம் வழங்கியுள்ள தண்டனையை எதிர்த்தோ நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்திருந்தால் பணிக் கொடை மற்றும் வருங்கால வைப்புநிதி மறுக்கப்படுகிறது.இது சரியற்றது என பல நீதிமன்றங் கள் தீர்ப்பளித்த பின்பும், போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
போக்குவரத்துக்கழக தொழிற் சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த அறிவிப்புக்கள் கொடுக்கப்பட்டு, தொழிலாளர்துறை முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் துறை கூறும் அறிவுரைகளை நிர்வாகம் அமல்படுத்துவதில்லை.மேலும், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளும் விஷயங்களையும் நடைமுறைப்படுத்துவது இல்லை. போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் இந்த தவறான அணுகுமுறையை கைவிட வேண்டும் அடிப்படையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் ஆணையர் பங்கேற்க வேண்டுமென முறையீடு செய்தோம்.

அந்த அடிப்படையில் தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்பு நடைபெறும் தாவா சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கடந்த ஓராண்டு காலமாக தொழிலாளர் ஆணையர், கூடுதல் தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் தனி இணை ஆணையர் ஆகிய தொழிலாளர் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர்.“ஓய்வுபெற்ற ஊழியர்களின் பணப் பலன் தொடர்பாக பணிக்கொடை பட்டுவாடா சட்டம், வருங்கால வைப்புநிதி சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
எந்த காரணத்தைக் கொண்டும் நிறுத்தி வைக்கக் கூடாது” என தொழிலாளர்துறை அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது.குறிப்பாக தொழிலாளர் ஆணையராக உள்ள இரண்டு ஆட்சித்துறை அதிகாரிகள் பல பேச்சுவார்த்தைகளில் இதை நிர்வாகத்திற்கு சுட்டிக் காண்பித்து பணப்பலனை வழங்க உத்தரவிட்டனர்.தற்போது 01.01.2020 முதல் 30.04.2020 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பலன்கள் வழங்கப் படவுள்ளது. இப்போதும், வழக்கு மற்றும் துறைரீதியான நடவடிக்கை ஆகியவற்றை காரணம்காட்டி பல தொழிலாளர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எங்களது தொழிற்சங்க கடிதம் வழங்கப்பட்ட பின்னர், தொழிலாளர் துறை முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், நிர்வாகம் கலந்து கொண்டு எவ்வித நிபந்தனையும் இன்றி ஒய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்கள் வழங்கப்படும் என ஒப்புக்கொண்டுள் ளது.மேலும் தொழிலாளர் தனி இணை ஆணையர் அவர்களின் உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்ட பின்பும், பேச்சுவார்த்தை யில் ஒப்புக்கொண்டவாறு ஓய்வுபெற்ற தொழிலாளர்க ளின் பணபலன்களை வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல.

இவ்வாறு, போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் சட்டத்தையோ, தொழிலாளர் துறையின் உத்தரவையோ பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டதையோ அமல்படுத்த மறுத்து வருவது நியாயமற்றது. பல ஆண்டு காலம் நிறுவனத்திற்காக திறம்பட உழைத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களை கொடுமைப் படுத்துவது என்ற குறுகிய நோக் கத்தை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. இதனால், போக்குவரத்துக்கழகங்களுக்கும் எவ்வித பலனும் இல்லை. பொதுத்துறை நிறுவனமே இவ்வாறு செயல்படுவது மிகவும் மோசமான நடவடிக்கையாகும்.மேலும், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் தொடரும் வழக்குகளில் உயர்நீதிமன்றம் பணப்பலன்களை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டுள்ளது. உரிய காலத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை வழங்காமல் இருப்பதால் நிர்வாகத்திற்கும் அரசிற்கும் இழப்புதானே தவிர லாபமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே, உடனடியாக தலையிட்டு, வழக்கு மற்றும் துறைரீதியான நடவடிக்கை ஆகியவற்றை காரணம் காட்டி ஓய்வுகால பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ள தொழிலாளர்களுக்கு, நீதிமன்றங்கள் அறிவுறுத்தியது போல 6 சதவீத வட்டியுடன் சேர்த்து ஓய்வுகால பணப் பலன்கள் வழங்கிட நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீதும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;