பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான கூட்டமைப்பில் (OECD) உள்ள நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மோசமான குறைந்த பென்சன் திட்டத்தால் முதியோர் வறுமை அதிகரித்துள்ளது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இக்கூட்டமைப்பில் உள்ள நாடுகளிலேயே தென் கொரியாவில் தான் முதுமையில் வறுமையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் அந்த அறிக்கை காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு முதல், ஓய்வூதியம் குறித்த அறிக்கை வெளியிட துவங்கியதில் இருந்தே தென் கொரியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அறிக்கை புள்ளிவிவரங்களின்படி 66 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தென் கொரியர்களில் 40.4 சதவீதம் பேர் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அந்நாட்டின் பொது வறுமை விகிதமான 15.3 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 25.1 சதவீத வேறுபாட்டை கொண்டுள்ளது.
மேலும் இந்த கூட்டமைப்பில் உள்ள 37 நாடுகள் மிக குறைவான முதியோர் உதவித்தொகையையே வழங்குவதாகவும் இதனால் அங்கும் பெருமளவிலான முதியவர்கள் வறுமையில் இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
கூட்டமைப்பு நாடுகளில் சராசரி முதியோர் வருமான வறுமை விகிதம் 14.2 ஆக உள்ளது. தென் கொரியாவிற்கு அடுத்தபடியாக வறுமை விகிதம் எஸ்தோனியாவில் 34.6 சதவீதம் , லாத்வியாவில் 32.2 சதவீதம், லிதுவேனியாவில் 27.0 சதவீதம் ஆக உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் முறையே 22.8 சதவீதமும் மற்றும் 22.6 சதவீதமாக உள்ளது. ஜப்பானில் 20 சதவீதமாகவும் உள்ளது.
தென் கொரியாவை போலவே எஸ்தனியா, லாத்வியா ஆகிய நாடுகளிலும் பொது வறுமையை விட முதியோர்கள் எதிகொள்ளும் வறுமை 15 சதவீதம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக தென் கொரியாவில் முதுமைப் பருவத்தில் உள்ள பெண்கள் ஆண்களை விட 11.3 சதவீதம் அதிக வறுமையில் உள்ளனர். இதுவே கூட்டமைப்பு நாடுகளில் 16.5 சதவீதம் வறுமையில் உள்ளனர். அறிவியல் ரீதியாக நீண்ட ஆயுட்காலம் கொண்ட பெண்கள் ஆண்களை விட குறை வான ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்றும் இதுவே அவர் களின் வறுமைக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.