tamilnadu

img

‘அரணாக நிற்கும் ஜனநாயக சக்திகள்’

சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களை விட இந்துக்களே பெருமளவில் போராட்டம் நடத்துகின்றனர். அத்தகைய ஜனநாயக சக்திகளே அரணாக இருந்து சிறுபான்மை மக்களை பாதுகாக்கின்றனர் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தலைவர் எஸ்.நூர்முகமது கூறினார்.குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் தாம்பரத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்தக்கருத்தரங்கில் எஸ்.நூர்முகமது பேசியதன் சுருக்கம் வருமாறு:

இஸ்லாமிய சமூகத்தை விட இந்து சமூகத்தில்தான் விவாகரத்தும், பலதார மணமும் அதிகமாக உள்ளது. ஆனால் அதனை மறைத்து சங்பரிவாரம் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தி வருகிறது. பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் நோக் கோடு உள்ளது.குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் வெகுண்டெழுந்து போராடுகின்றன. இஸ்லாமியர்களை காட்டிலும் இந்துக்களே இந்தப் போராட்டத்தில் முன்னணியில் நிற்கின்றனர். இதை திசைதிருப்ப பிரதமர் உடையை வைத்து பேச, இந்து மாணவர்கள் இஸ் லாமியர்களின் உடையை அணிந்து போராடுகின்றனர்.காக்கி சட்டைகளின் வேடத்தில் ஆர்எஸ்எஸ் பரிவாரம், போராடுகிறவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்துகின்றன. அவற்றையெல்லாம் மீறி நாட்டில் போராட்டம் பற்றி எரிகிறது. ஜனநாயக சக்திகளின் போராட்டத்தின் காரணமாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்த கட்சிகள், தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதனை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

மக்கள் போராட்டங்களை முக்கியத்துவம் தந்து ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்ளுக்கு ஆட்சியாளர்கள் கட்டளையிட்டுள்ளனர். தமிழக அடிமை அரசும் மத்திய அரசுக்கேற்ப நடந்து கொள்கிறது. குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மத அடையாளங்களை தவிர்த்து பங்கேற்போம். தனிமைப்படாமல் பொதுச்சமூகத்தோடும், ஜனநாயக சக்திகளோடும் இருப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்வில், காயிதேமில்லத் கல்லூரி தாளாளர் தாவூத்மியான்கான், சமூக செயற்பாட்டாளர் க.பீம்ராவ், நலக்குழு தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.பாக்கியம், செயலாளர் ஒய்.இஸ்மாயில், பொருளாளர் கே.மணிகண்டன், விசிக காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தேவஅருள்பிரகாசம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாம்பரம் பகுதிச் செயலாளர் க.வெ.ராதாகிருஷ்ணன்,  நலக்குழுவின்  மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தமீம்பாஷா, தாம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் எம்.ஜாபர்சாதிக், துணை ஒருங்கிணைப்பாளர் ஆ.கோ.ஜெயன் உள்ளிட் டோர் பேசினர்.

;