புதுதில்லி:
மனு கொடுப்பதெல்லாம் சரிப்படாது, மோடி அரசை வழிக்குக் கொண்டுவர வேண்டுமெனில் வீதிகளில் இறங்கிப் போராட எதிர்க் கட்சிகள் முன்வர வேண்டும் என மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா, கடந்த சில ஆண்டுகளாகவே, மோடிஅரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அராஜகங்களை எதிர்த்துப் பேசி வருகிறார். ரபேல் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் மோடி அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த அவர், புலம்பெயர் தொழிலாளர்கள் நடுரோட்டில் விடப்பட்டதை எதிர்த்து,அண்மையில் தில்லியில் தர்ணாவிலும் ஈடுபட்டுக் கைதானார்.
இந்நிலையில், காங்கிரஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற 22 எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்குறித்து அவர் கருத்து தெரிவித் துள்ளார்.அதில், “மத்திய அரசு, ஏழைகள் அனுபவிக்கின்ற கடும் துயரத்தை காணாமலும், அவர்களது ஓலத்தை கேட்காமலும் அசட்டை செய்கிறது; இந்நிலையில், வெறுமனே மனு கொடுப்பதும், அறிக்கை வெளியிடுவதும் வேலைக்கு ஆகாது. எதிர்கட்சிகள், வீதிகளில் இறங்கிப் போராட முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.