tamilnadu

img

டிசம்பர் 3 மாற்றத்திறனாளிகள் உலக தினம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

டிசம்பர் 3ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி,அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கண்ணியம் மற்றும் சமத்துவ வாழ்க்கைக்காக தேடலுடன் வாழும் லட்சக்கணக்கான  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
“நீடித்த, அணுகத்தக்க, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய,  கொரோனாவுக்கு பிந்தைய உலகை மீண்டும் சிறப்பாக கட்டமைக்க வேண்டுமென்ற கருப்பொருளுடன் 2020 உலக தினத்தை அணுசரிக்குமாறு உலக நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளை அவர்களது குடும்பத்தினரே சுமையாக கருதும் நிலையில், இவர்களுக்குப் பாதுகாப்பாக மொத்த சமூகமும் மத்திய, மாநில அரசுகளும் கடமையாற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால், நமது அரசுகள் இக்கடமையினை தட்டிக்கழித்து வருவது வேதனையளிப்பதாகும், வேலைசெய்ய தகுதி படைத்த மாற்றுத்திறனாளிகளை 63.7 சதமானம் பேர் வேலையின்றி வாடுகின்றனர். எஞ்சியவர்களும் அத்துக்கூலிகளாகவும் அன்றாடக்காய்ச்சிகளாகவும் உள்ளனர். கொரொனா ஊரடங்கு காலத்தில் இவர்கள் அனுபவிக்கும் துயரம் சொல்லி மாளாது. இயல்பாகவே நோய் எதிர்ப்புத்திறன் குறைவு உள்ள மாற்றுத் திறனாளிகள் எளிதில் கொரோனா தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதால் இவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து உணவுகள் வழங்கிட வேண்டுமென ஐ.நா. பொதுச் செயலாளரின் வேண்டுகோiளைக் கூட மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. வாழ வழியின்றி மாற்றுத் திறனாளிகளும், அவர்தம் பெற்றோர்களும் தற்கொலையில் மடிந்து போன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
கொரோனா காலத்தில் பல லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கிய பாஜக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வெறுமனே ரூ. 1,000/- வழங்குவதாக அறிவித்து அதையும் சுமார் 3.5 சதவிகிதத்தினருக்கு மட்டும் வழங்கி விட்டு, கோடிக்கணக்கான மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றியுள்ளது.
அமலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமலாக்க முயற்சிக்காமல், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக குற்றம் புரிவோர் மீதான தண்டனைக்கான சரத்துக்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் அச்சட்டத்தை மத்திய அரசு திருத்த முயன்ற போது மாற்றுத்திறனாளிகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலுவாக குரல் கொடுத்த பின்னணியில் மத்திய அரசு பின்வாங்க நேரிட்டது.
அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வதால் சமூக நீதி அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய 4 சதவிகித பணிவாய்ப்புகள் தற்போது குறைந்து வருகிறது.  தனியார் துறை பணிகளில் குறைந்தபட்சம் 5 சதவிகித பணிகளை வழங்க வேண்டுமென்ற மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்ட சரத்துக்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தாத நிலையில் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.
பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து உடனடியாக நிரப்ப வேண்டுமென்று 2013ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது.
தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மாத உதவித்தொகை ரூ.3,000/- அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிடவும், சமூகத்தில் கவுரவமான பாதுகாப்பான வாழ்க்கை உத்தரவாதத்தினை பெற்றிட மாற்றுத் திறனாளிகள் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சோதனைகள் நிறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்த சமூகமும் ஆதரவு கரம் நீட்ட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தினத்தில் அனைவரையும்  வேண்டுகிறது. என தெரிவிக்கபட்டுள்ளது.

;