tamilnadu

மா.சுப்பிரமணியத்தின் இளைய மகன் மரணம்.... தலைவர்கள் இரங்கல்

சென்னை:
திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயரும், சைதாப் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியம் இளைய மகன் அன்பழகன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

சென்னை முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்பிரமணியத்துக்கு இரண்டு மகன்கள் உண்டு. மூத்த மகன் செழியன் லண்டனில் மருத்துவராக உள்ளார். இரண்டாவது மகன் அன்பழகன் மாற்றுத்திறனாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு மா. சுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.சுப்பிரமணியம் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அவரின் மகன் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து, கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அன் பழகன் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள்களுக்கு முன் அன் பழகனுக்கு கொரோனா நெகடிவ் என்று முடிவு வந்ததால், அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.இந்த நிலையில், திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதில், அன்பழகன் உயிரிழந்தார்.அன்பழகன் சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர்.

தற்போது, 34 வயதான அன்பழகன் வீல் சேரில்தான் வாழ்ந்து வந்தார். சிறப்புக் குழந்தையான அன்பழகன் மீது சுப்பிரமணியமும் அவரின் மனைவி காஞ்சனாவும் மிகுந்த அன்பு வைத்திருந்தனர்.அரசியல், தொழில் காரணமாகவும் மா. சுப்பிரமணியம் வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வார். அப்போதெல்லாம் அன்பழகனின் மனைவி காஞ்சனா, வீட்டை விட்டு அகலாமல் மகன் அன்பழகனை உடனிருந்து அன்புடன் பார்த்துக் கொண்டுள்ளார்.இளம் வயது மகனை இழந்து பரிதவிக்கும் மா. சுப்ரமணியம் அவரது குடும்பத்தாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.