tamilnadu

img

இறந்த மருத்துவர்- செவிலியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: சிபிஐ

சென்னை:
சென்னை அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்த மருத்துவர் மற்றும் செவிலியர் குடும்பங்களுக்கு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச்செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த ஜோன் மேரி பிரிசில்லா இம்மாதம் 27 ஆம் தேதி கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் உயிரிழந்தார்.கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற வேண்டிய தலைமை செவிலியர் கொரோனா நோய் தொற்று சிகிச்சை அளிக்க வேண் டிய அவசியம் கருதி அரசு பணி நீடிப்பு செய்ததால் பணியில் தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24.05.2020 ஆம் தேதி உடல் நலக்குறைவால் ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் கொரோனா பிரிவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவிலியர் பிரிசில்லா உயிரிழந்தார். இவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் மருத்துவக் குறிப்பேட்டில் ‘கொரோனா’ நோய்க்கு சிகிச்சை அளித்ததை பிரிசில்லா  கொரோனா தாக்குதலால் மரணமடையவில்லை என்று கூறுவது நம்பத்தகுந்த தகவல் அல்ல. இது தொடர்பாக மருத்துவமனை ‘டீன்’ தெரிவித்துள்ள செய்தி வருத்தம்அளிக்கிறது.

இதே போல் கொரோனா நோய் பெருந் தொற்று பகுதியில் பணியாற்ற ஒப்பந்த பணியில் நியமிக்கப்பட்ட மருத்துவர்  அப்பிராஸ் பாஷா (யுனானி)  இவர் கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் உயர்தனி சிறப்பு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இம்மாதம் 27 ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இவரது மறைவுக்கு கொரோனா நோய் தொற்று காரணமல்ல என தெரிவிப்பதும் நம்பத்தகுந்த செய்தி அல்ல என்பது தெரிய வருகிறது.
கொரோனா நோய் தொற்று தாக்குதலில் உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அறிவித்தபடி தலைமை செவிலியர் மற்றும் மருத்துவர் ஆகியோர் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இந்தக் கடமைப் பொறுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள செவிலியர் மற்றும் மருத்துவர் மறைவுக்கான காரணங்களை மூடிமறைக்கும் செயலில் அரசு ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் கொரோனா நோய் பெருந் தொற்று தடுப்பு பணிகளில், முன் களப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள்,  தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் அரசின் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்பதை உணர வேண்டும்.மறைந்த மருத்துவர் அப்பிராஸ் பாஷா மற்றும் தலைமைச் செவிலியர் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கி, அவர்களது குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், கொரோனா நோய் தொற்று பாதிப்புகளை மறைத்து பேசும் செயலில் தமிழ்நாடு அரசு ஈடுபடக் கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
 

;