tamilnadu

img

டெல்டா மாவட்டங்களை புரட்டி எடுக்கும் ஃபெங்கால் புயல்

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக செவ்வாய்க்கிழமை வலுப்பெற்றது. புதன்கிழமை மாலை நிலவரப்படி, அது நாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென் கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே-தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 1 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்ததால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.

அதி கனமழையால் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்

மயிலாடுதுறை, நவ.27 - மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. கனமழை காரண மாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.  பல்வேறு கிராமங்களில் குடியி ருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.

இதனிடையே தரங்கம்பாடி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி நேரில் ஆய்வு மேற் கொண்டார். குறிப்பாக, தரங்கம்பாடியில் உதவி ஆய்வாளர் (தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை, சென்னை) திசதக்கஸ் துலா தலைமையிலான 30 மீட்பு படை  வீரர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர்  மீட்பு படையினரை மாவட்ட ஆட்சியர்  சந்தித்து, மீட்பு கருவிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தேவைகள் குறித்து ஆட்சியர் கேட்ட றிந்தார்.  தொடர்ந்து, தரங்கம்பாடி பேரூ ராட்சி மிஷன் தெருவில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரை பகுதி, செம்ப னார்கோவில் முக்கரும்பூர் கிராமத்தில்  விளைநிலங்களில் உள்ள மழை நீர்,  வடிகால் வாய்க்கால்களில் வடிந்து வரு வதை ஆட்சியர் ஆய்வு செய்தார்

வணிக நிறுவன கட்டிடங்களால்  மழைநீர் வெளியேற வில்லை: ஆட்சியரிடம் புகார்

தரங்கம்பாடி உப்பனாற்றினை ஒட்டியுள்ள கிரா மங்களான கேசவன்பாளை யம், சமயன் தெரு, புதுப்பாளையம், காரண்தெரு,  சாத்தங்குடி ஆகிய 5 கிராமப் பகுதி களில் மழைநீர் சூழ்ந்து உள்ளதாகவும், வணிக நிறுவனங்கள்  மழைநீர் வெளியேறுகிற ஊத்த வாய்க்கால் மற்றும் பன்னியடிச்சான் மதகு ஆகியவற்றை ஆக்கிரமித்து விட்டதால்தான் மழைநீர் வெளியே றாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு மழைக் காலங்களின்போதும் கிராம மக்கள் கடும் அவதியடைவதாகவும், உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் தரங்கம்பாடி பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சிய ரிடம் தரங்கம்பாடி பேரூராட்சி துணைத்  தலைவர் பொன்.இராஜேந்திரன், பேரூ ராட்சி கவுன்சிலர் செந்தாமரைச் செல்வி ரமேஷ் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

தஞ்சாவூர், நவ.27 -  ஃபெங்கால் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. 

இந்த ஃபெங்கால் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஒரு சில இடங்களில் கனமழையும் மற்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. புதன்கிழமை காலை முதல் மழை அதிகரிக்க தொடங்கியது. பாபநாசம் தாலுகா பண்டாரவாடை, ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டப்பயிரான வெற்றிலை சுமார் 12.5 ஏக்கர் அளவில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து முழுமையாக கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தெரிவித்தார்.

அம்மாப்பேட்டை

அம்மாப்பேட்டை அருகே புத்தூர் பகுதியில் வயல் ஓரங்களில் உள்ள வாய்க்கால்களை சரியாக தூர்வாராததால் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாகுபடி வயல்களை சூழ்ந்துள்ளது. வாய்க்கால்களை சரியாக தூர்வாரினால் மழைநீர் வழிந்தோடிவிடும். ஆனால் வாய்க்கால்கள் மண்மேடிட்டு இருப்பதால் சிறு மழைக்குகூட வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

கஜா புயல் காலம் போல...

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.  இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மல்லிப்பட்டினம் கடற்பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டதாக வதந்தி பரவியது. ஆனால், மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் அலை ஏதுமின்றி குளம் போல் அமைதியாக காட்சியளிக்கிறது. கடல்பகுதியில் உள்நோக்கி காற்று வீசி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலின் போதும் இப்படித்தான் தரைப்பகுதியில் இருந்து கடல் பகுதியை நோக்கி காற்று வீசியதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை ஆகியோர் கடலோரப் பகுதி கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடலோரக் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுமாறு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது

இந்நிலையில் திருக்களாச்சேரி ஊராட்சி, பாலூர் கிராமம், தெற்கு தெருவில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரிய பழமையான அரண்மனை போன்ற வீடு கனமழை காரணமாக  புதனன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. விபத்து குறித்து வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு செய்து, வீட்டில் குடியிருந்தவர்களை பாதுகாப்பாக மாற்று இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

அறுவடை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவாரூர், நவ.27 - நவ.26, 27 ஆகிய இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால், திருவாரூர் மாவட்டத்தில் விளைநிலங்கள், குடிசை வீடுகள், கால்நடைகள் மற்றும் கிராமப்புறச் சாலைகள் பெருமளவில் சேதமாகி உள்ளன. மேலும், மழை தொடர்வதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்து உள்ளனர்.

நன்னிலம் 

நன்னிலம் ஒன்றியத்தில் அகர திருமளம், முகுந்தனூர், பாவட்டகுடி, நெம்மேலி போன்ற கிராமங்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதே போல் மன்னார்குடியில் பரவாக்கோட்டை, மகாதேவப்பட்டினம், வடுவூர், மேலவாசல், உள்ளிக்கோட்டை பகுதிகளில் சம்பா அறுவடை நேரத்தில் கனமழையால் அறுவடை செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

குடவாசல்

குடவாசல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டு கட்டடத்தின் மேல்புறம் மழை நீர் கசிந்து, கீழ் தளம் முழுவதும் நீர் பரவியுள்ளது. இதனால் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்வதற்கும் சிரமமாக உள்ளது. எனவே உடனடியாக மருத்துவமனையை ஆய்வு செய்து கட்டடத்தையும், நோயாளிகளையும் பாதுகாக்க வேண்டும். குடவாசல், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி நகரத்தில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 6 ஆவது வார்டில் நரிக்குறவர்கள் காலனி முற்றிலும் பாதிக்கப்பட்டதால், இப்பகுதி மக்கள் முகாமில் தங்கியுள்ளனர். 

நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், மழை, வெள்ளம் நீடிக்குமானால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் செயல்பட வேண்டும். இத்தகைய இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு மாவட்டம் முழுவதும் மழை நீர் வடிகால்களை சீரமைத்து சிறப்பாக இயக்க வேண்டும். தூர்வாரும் பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைத்து  மக்களின் கோரிக்கையாகும்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொழில் முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்  துறை அமைச்சர் முனைவர் டி.ஆர். பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற  உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ. பாலசுப்ரமணியன் உடனிருந்தார்.  முன்னதாக, திருத்துறைப் பூண்டி நகராட்சி, அபிஷேக கட்டளை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் அரசு மேல்நிலைப் பள்ளி முகா மில் தங்கியுள்ள பொது மக்களுக்கு காலை உணவு வழங்குவதையும், ஆரியலூர் பகுதியில் விவசாய நிலங் களில் நீர் தேங்கி நிற்பதையும் பார்வையிட்டு விவசாயிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, கீழப்பெருமழை ஊராட்சி யில் வாய்க்கால் நீரில் தேங்கி நிற்கும் வெங்காயத் தாமரைகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணி களையும், விளாங்காடு பகுதிகளில்  சூழ்ந்துள்ள மழைநீர் அகற்றப்படு வதையும் பார்வையிட்டார்.  இந்நிகழ்வுகளில், திருத்து றைப்பூண்டி நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், துணைத் தலை வர் எம்.ஜெயப்பிரகாஷ், வட்டாட்சி யர் குருமூர்த்தி உள்ளிட்ட அரசு அலு வலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மழை நீரில் மூழ்கி முளைத்த நெற்பயிர்

நாகப்பட்டினம், நவ.27- வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை கொட்டி தீர்க்கிறது.

வங்க கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்களை மாவட்ட நிர்வாகம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே திரும்பி வர அறிவுறுத்தியுள்ளது. புயல் எச்சரிக்கையையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செவ்வாயன்று மாவட்டத்தின் அனைத்துப் பள்ளி-கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ்  விடுமுறை அறிவித்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்து குறுவை சாகுபடி மழை நீரில் மூழ்கியுள்ளது. நாகப்பட்டினம் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் 20 ஏக்கர் குறுவை சாகுபடி நீரில் மூழ்கியுள்ளது.

செம்பியன்மாதேவி ஊராட்சி, அகர செம்பியன் மாதேவி பெருமாள் கோவில் தெருவில் வீரமணி, கலியபெருமாள், சத்யராஜ் உள்ளிட்டோரின் கூரை வீடுகள் இடிந்தன.  மழையால் சேதமடைந்த பயிர்களையும், விளைநிலங்களிலும் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, நாகை ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், மாவட்ட குழு உறுப்பினர் க.வெங்கடேசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முகேஷ் கண்ணா, தலைவர் எம்.ஜோதிபாசு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.