tamilnadu

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

சென்னை,ஜூன் 15- ஈரோடு மாவட்டம் கொண்டச்சி பாளையம் அருகே உள்ள களியங்காட்டு வலசு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி(26). பட்டதாரியான இவர் சென்னை சேத்துப் பட்டிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவர் அங்கு பணியில் சேர்ந்தார். சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவரும் சுரேந்தர்(27) என்ற வாலிபரும் உயிருக்கு உயிராக காதலித்ததாக கூறப்படுகிறது.  வெள்ளிக்கிழமை (ஜூன்15) தேன்மொழி, பணி முடிந்து சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்கு காத்திருந்த சுரேந்தரை சந்தித்துள்ளார். இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர். திடீரென்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டபோது தான்  மறைத்து வைத்திருந்த அரிவாளால் தேன்மொழி வெட்டியுள்ளார். இதில், தேன்மொழியின் தாடை மற்றும் கன்னம் பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது கழுத்து மற்றும் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அந்த நேரத்தில் தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி வந்து மின்சார ரயில் முன் பாய்ந்தார். ஆனால் ரயில் என்ஜின் சற்று முன்னாள் சென்றுவிட்டது. சுரேந்தர் ரயில் என்ஜினுக்கு பின்னால் உள்ள பெட்டியில் மோதி தலையில் பலத்த காயத்தோடு பிளாட் பாரத்தில் தூக்கி எறியப்பட்டார்.  கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். தேன்மொழியை வெட்டிய அரிவாளும் அங்கேயே கிடந்தது. இதுபற்றி பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தேன்மொழியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை. சுரேந்தர் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்த்தனர். அவருக்கும் சுயநினைவு இல்லை.இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  

;