tamilnadu

img

ஊரடங்கு வாழ்வாதார நிவாரணமாக மாதம் ரூ.5000 கேட்டு நாடு தழுவிய போராட்டம்!

சென்னை:
கொரோனா ஊரடங்கு வாழ் வாதார உதவியாக மாதம் ரூ.5,000 வழங்கக்கோரி  மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஜூலை-7 அன்று நாடு தழுவிய போராட்டத்தை  நடத்த ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அறைகூவல் விடுத்துள்ளது.  இதுகுறித்து அந்த அமைப் பின் பொதுச்செயலாளர் முரளிதரன் டெல்லியில் வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம் வருமாறு:

மத்திய மாநில அரசுகள் அறிவித்த திட்டமிடப்படாத திடீர் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், லட்சக் கணக்கான மாற்றுத்திறனாளிகள் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து முன்பைவிட கூடுதலாக  வறுமையிலும், பசியிலும் வாடுகின்றனர்.மார்ச்-26 அன்று மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமான், அறிவித்த ரூ.1000 நிவாரணத் தொகை, 2011 மக்கள் தொகையின்படி, இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டத் தில் பயன்பெறும் சிறு பகுதியினரான 3.81 விழுக்காடு மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும். எஞ்சிய 96.9 விழுக் காடு மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற உண்மையை நிதி அமைச்சர் வெளிப்படுத்தவில்லை.

“சென்டர் பார் இன்குலூசிவ் பாலிசி - Centre for Inclusive Policy” என்ற அமைப்பு தயாரித்துள்ள அறிக்கையின்படி 2011 மக்கள் தொகையின்படி, நாட்டில் உள்ள உழைக்கும் வயதுடைய மாற்றுத்திறனாளிகளில் 7.6 % பேர் மட்டுமே மேற்கண்ட மாத உதவித்தொகை பெற்று வருவதும், உழைக்கும் வயதுடைய மிகப் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகைகூட பெறாததும் குறிப்பிடத் தக்கது.2011 மக்கள் தொகையின்படி 63.67 விழுக்காட்டினர் வேலையற்றவர்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது. வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளிலும்கூட சுமார் 1 விழுக்காட்டினர் பேர் மட்டுமே சமூகப்பாதுகாப்புடன் கூடிய துறைகளில் பணிபுரிகின்றனர். ஊரடங்கு தொடர்வதால் அமைப்புசாரா துறைகளில் உள்ள சுமார் 99ரூ  மாற்றுத்திறனாளிகள் வேலைகளை இழந்து தவிக்கின்றனர். அரசு மற்றும் சமூகப்பாதுகாப்பு உள்ள துறைகளில் பணியாற்றுவோரும் பாதிக் கப்படும் நிலையில்தான்  உள்ளனர்.

இத்தகைய கடுமையான சூழலில் மாற்றுத்திறனாளி ஒவ்வொருவருக்கும் வாழ்வாதார பாதிப்பு இழப்பீடாக மாதம் ரூ.5,000 கொரோனா ஊரடங்கு விலக்கிக்கொள்ளும் வரை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டுமென ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வலியுறுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் செலவினம் ஆவதை ஈடு செய்ய வேண்டும் என்பதை அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.அத்துடன், மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியம்,  குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் மறுக்காமல் வழங்க வேண்டும்; மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத் தில் சட்டப்படி 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியமும், நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க  வேண்டும்; ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப் பிரிவு 24-ன்படி அனைத்து சமூகப் பாதுகாப்பு திட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 விழுக்காடு கூடுதல் அளவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை
களை வலியுறுத்தி  ஜூலை-7 அன்று நாடு தழுவிய போராட்டங் கள் நடத்த ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அறைகூவல் விடுக்கிறது.  கொரோனா தொற்று அபாயத்தை உணர்ந்து, தனிநபர் இடைவெளி, முகக்கவசங்கள் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து போராட்டங்கள் நடத்த வேண்டும்.இவ்வாறு  முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
இந்த  போராட்ட அறைகூவலை ஏற்று, தமிழகத்தில்  ஜூலை 7ஆம் தேதி கிராமங்களில், நகரங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளை திரட்டி, ஆங்காங்கே உள்ள ஊராட்சி, VAO உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பாக ஒரு மணி நேரம் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட் டம், போராட்டங்கள் நடத்திட வேண்டும் என அனைத்து சங்கக் கிளைகளையும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் பா. ஜான்ஸிராணி பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் கேட்டுக்கொண்டுள்ளனர்.இப்போராட்டத்தில், தற்போது தமிழக அரசு தரும் நிவாரண தொகை ரூ.1000 வழங்குவதில் உள்ள குளறுபடிகள், மற்ற வாழ்வாதார பிரச்சனைகளையும் இணைத்து போராட்டங்கள் நடத்தவும், இயன்ற வகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கவும் வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண் டுள்ளனர்.

;