தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை சம்பவங்களை தடுப்பது குறித்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்
கூறப்பட்டுள்ளதாவது
அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை இம்மனுவின்
மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தங்களது கவனத்திற்கு கொண்டு
வர விரும்புகிறது.
கோவிட் 19 தொற்று நிலவும் சூழலில், அதிகரிக்கும் பெண்கள் மற்றும்
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஐநா சபை shadow pandemic "
என்று அழைக்கிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டுவர ஒவ்வொரு நாடும்
எடுக்கும் முயற்சிகளுக்கு இணையாக, பாலியல் வன்கொடுமைகளை
கட்டுப்படுத்தவும் முயற்சிகள் எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை
வலியுறுத்துகிறது.
இந்நிலையில் குழந்தைகள் மீதான குற்றங்கள் குறிப்பாக, பாலியல் வல்லுறவு
குற்றங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்ட
வழக்குகளையும், ஊடகங்கள் மற்றும் இணையத்தின் மூலமாக பெறப்பட்ட
வழக்குகளையும் பட்டியலிட்டுள்ளோம்.
2020 ஜனவரி முதல் எடுக்கப்பட்ட 63 வழக்குகளில், பிறந்து 75 நாட்களே ஆன
பெண் குழந்தை முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமி வரை பாலியல் வன்கொடுமை,
கருத்தரிப்பு, கொலை என பல கொடூரங்களை சந்தித்துள்ளனர். இவற்றில் தலித்
மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அடக்கம். பெரும்பாலான
இக்கொடுமைகள் குடும்பச் சூழலிலேயே நிகழ்ந்துள்ளது. குழந்தைகள்/சிறுமியர்
மீதான பாலியல் வல்லுறவு குற்றவாளிகளாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்
இருப்பதும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது. இச்சம்பவங்கள் மீது POCSO
சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப் பட்டிருக்கிறது. சில சம்பவங்களில் FIR பதிவு
செய்வதே பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் சாத்தியமாகும் சூழல் இருக்கிறது.
சரியான சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்வது மட்டுமல்ல, துவக்கத்தில்
இருந்து கடைசி வரை போக்சோ சட்டத்தினுடைய விதிமுறைகளுக்கு ஏற்ப
காவல்துறை விசாரணை, நீதிமன்ற விசாரணை, மாவட்ட குழந்தைகள் நல
குழுவின் அணுகுமுறை அமைவதையும் உறுதி செய்ய வேண்டும்.
குற்றமிழைத்தவர்களுக்கு உறுதியான தண்டனை பெற்றுத்தருவதன் மூலமே
இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்திட இயலும்.
மேலும் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் சட்டம், குழந்தை திருமணங்கள்
தடை சட்டம் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாக்கும் சட்டம்
போன்றவைகள் ஏட்டளவிலேயே உள்ளன. அதேபோல குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டமும் முழுமையாக
செயல்படுத்தப்படவில்லை. நல்ல நோக்கோடு சட்டங்கள்
நிறைவேற்றப்பட்டாலும் இவைகளை செயல்படுத்தினால் மட்டுமே குழந்தை
உரிமைகளை பாதுகாத்திட முடியும் என்பதையும் வற்புறுத்த விரும்புகிறேம்.
பெண்களை போகப் பொருளாய் அணுகும் மனநிலையை மாற்றும்
முயற்சிகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும். பாடத்திட்டத்தில்
தேவைப்படும் மாற்றங்கள், அதிகாரப் படிநிலையில் இருப்பவர்களுக்கு பாலின
நிகர்நிலை உணர்வூட்டும் பயிற்சிகள், தொலைக்காட்சிகள் மூலமாக இந்த
குற்றத்திற்கு எதிராகவும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும் சமூக
செய்திகள் அடங்கிய விளம்பரங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த
வேண்டும்.
போதைப்பழக்கம் நிச்சயமாக வன்முறையில் ஈடுபடுகிற மனநிலையை
உருவாக்குகிறது. எனவே டாஸ்மாக் கடைகளை மூடுவது என்கிற
நடவடிக்கையை எடுப்பது, பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை ஓரளவு
குறைப்பதற்கு உதவும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி, மருத்துவ மற்றும் மனநல ஆற்றுப்
படுத்தும் நடவடிக்கைகள், ஆதரவு தலையீடுகள், பள்ளி இடைநிற்றலை தடுப்பது,
காவல்துறையின் விசாரணையும், நீதிமன்ற வழக்குகளும் முறையாக நடப்பதை
கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் வலுவாக மேற்கொள்ள
வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
அரசியல் கட்சிகள் ஜனநாயக இயக்கங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை
செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், தொலைக்காட்சி நிறுவன பிரதிநிதிகள்,
ஊடகவியலாளர்கள், விளம்பர நிறுவன பிரதிநிதிகள் ஆகியோருடன்
கலந்துரையாடல் நடத்தி வன்முறையை தடுப்பதற்கான சில உடனடி
நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு போக வேண்டும் என்பதையும் எங்கள்
ஆலோசனையாக முன்வைக்கிறோம்.