tamilnadu

img

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை- சிபிஎம் கண்டனம்

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

ராமேஸ்வரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண் ஒருவர் 25.05.2022 அன்று கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. இந்த கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

கடல்பாசி எடுக்கச் சென்ற அவரை வழிமறித்து காட்டுப் பகுதிக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி சித்ரவதை செய்து, மிகவும் கொடூரமான முறையில் முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளனர். இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதி 6 பேரை காவல்துறையினர் கைது செய்தது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, அவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்க வேண்டுமென காவல் துறையையும், தமிழ்நாடு அரசையும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற குற்றங்கள் நடப்பதற்கு போதை பழக்கமும் காரணமாக உள்ளது. போதைப் பொருள் விற்பனை தடையை கறாராக அமல்படுத்த வேண்டுமெனவும், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். 
இந்த பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் தனிக்கவனம் எடுத்து இதுபோன்ற வன்முறையை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, காவல்துறையினருக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம்  வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் தமிழக அரசை  சிபிஎம் வலியுறுத்துகிறது. 
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுப்பதற்கு அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் முன்வைத்து வருகிற ஆலோசனைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஎம் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
 

;