tamilnadu

img

அரசு உதவி பெறும் பள்ளியை பாதுகாக்க சிபிஎம் பிரச்சாரம்... காவல்துறை அராஜகம்

சென்னை:
சிங்காரம் பிள்ளை மேல்நிலைப் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி நோட்டீஸ் விநியோக பிரச்சாரம் நடத்த அனுமதித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

சென்னை வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை மேல்நிலைப் பள்ளி கடந்த 70 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியாக ஏழை எளிய ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கொடுத்து வரும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இப்பள்ளி நிர்வாகக் குழு தனது சுயலாபத்திற்காக பள்ளியின் 8 கிரவுண்ட் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்துள் ளது. நிலத்தை வாங்கிய தனிநபர்கள் பள்ளி கட்டிடங்களை சேதப்படுத்தி வணிக வளாகங் களை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.பள்ளி நிலம் சட்டவிரோதமாக விற்பனை செய்த செயல்பாடுகளை முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு சுட்டிக்காட்டி உடனே தலையிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.ஆனால், தமிழக அரசும், கல்வித்துறையும் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு துணைபோகும் வகையில் இப்பிரச்சனையில் அமைதிகாத்து வருவதால், பள்ளியை மீட்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதனன்று(நவ.11) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிங்காரம் பிள்ளை பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து வில்லிவாக்கம்  சிங்காரம் பள்ளி வாயிலிலிருந்து எழும்பூர் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் வரை நடைபெறும் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்தார்.நோட்டீஸ் விநியோகம் செய்ய முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்புக்கும் சிறிது நேரம் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரச்சாரத்தை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ். முரளி, முருகேசன் உள்ளிட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.முன்னதாக, சிங்காரம் பள்ளியின் முன்பு நூற்றுக் கணக்கில் போலீசாரை குவித்தும் கைது செய்ய வாகனங்களையும் கொண்டு வந்ததால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்ததது.