tamilnadu

img

தமிழக தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிபிஎம் பாராட்டு

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச நலனுக்கு விரோதமான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஜனவரி 8 புதனன்று நாடு தழுவிய அளவில் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் மகத்தான  வெற்றிபெற்றுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக வங்கி, இன்சூரன்ஸ், துறைமுகம், பாதுகாப்பு, தபால், என்.எல்.சி., மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்டு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.  சிறு-குறு தொழில் நிறுவனங்கள் 40 சதவிகிதத்திற்கும் மேல் இயங்கவில்லை. ஆட்டோ, மோட்டார், இன்ஜினியரிங், பஞ்சாலை, பின்னலாடை தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தி கைதாகியுள்ளனர். நண்பகல் 12 மணியிலிருந்து 12.10 மணி வரை 10 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி தொழிலாளர்களும், பொதுமக்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

புதுச்சேரியில் தனியார் பள்ளிகள், பெரும்பாலான கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வணிகர்கள் முழுமையாக பங்கேற்று வேலைநிறுத்தமும், கடையடைப்பு போராட்டமும் வெற்றிகரமாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடி கைதாகியுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்திட்ட அனைத்துதொழிற்சங்கங்களுக்கும் - அதன் நிர்வாகிகளுக்கும், வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகளுக்கும், வணிகர்களுக்கும், பொதுமக்க ளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.மத்திய பாஜக அரசின் தேசவிரோத, மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்.

கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்,  சிபிஐ(எம்)

;