tamilnadu

img

கொரோனா தடுப்பூசி அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும்

நியூயார்க்:
கொரோனா தடுப்பூசி அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே வலியுறுத்தியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும்  கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்கதடுப்பூசி கண்டுபிடிக்கும் தீவிரப்பணியில்  அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் தடுப்பூசிகள் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம்வகிக்கும் 193 உறுப்பு நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்ட கூட்டம் பொதுச்சபை அரங்கில் நடைபெற்றது. 

இதையொட்டி ஐ.நா.சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது:-வளரும் நாடுகளில் சுகாதார திட்டங்கள் மோசமாக இருப்பதால் கொரோனா தொற்றால் அந்த நாடுகள்தான் பெரிதும் பாதிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னேறிய நாடுகளை விட வளரும் நாடுகளில்தான் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாக உள்ளது. பணக்கார நாடாக இருந்தாலும் சரி; ஏழை நாடாக இருந்தாலும் நோய்த்தொற்றை எப்படி எதிர்கொள்கின்றன என்பதை பொறுத்துத்தான் பாதிப்புகள் அமைகின்றன.

பணக்கார நாடுகளில் சிறந்த சுகாதார வசதிகளும், நிதி ஆதாரங்களும் உள்ளன. ஆனால் பெரும்பாலான வளரும் நாடுகள் சுற்றுலா தொழிலையும், எண்ணெய் வளத்தையுமே நம்பி இருக்கின்றன. அந்த நாடுகள் பொருளா தார ரீதியில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. கொரோனா தொற்று சர்வதேச சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே அதற்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும். உலகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் எல்லா நாடுகளில் உள்ள மக்களுக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமாகும்.

ஏதாவது ஒரு நாட்டுக்கு கிடைக்காமல் போனாலும் கொரோனாவின் அச்சுறுத்தலை இந்த உலகம் தொடர்ந்து சந்திக்க வேண்டி இருக்கும். ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு கிடைக்காமல் போனால் அந்தநாடுகள் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.எனவே தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள் அனைத்து நாட்டு மக்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படவேண்டும். இது தொடர்பான நடைமுறைகளும், உடன்பாடுகளும் உருவாக்கப்படும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.