tamilnadu

img

காவிரி டெல்டா குறுவை நெல் சாகுபடி : ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு...

சென்னை:
காவிரி டெல்டா குறுவை நெல் சாகுபடிக்காக  ஜூன் 12 அன்று மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறித்து மே 18 அன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.  இக்கூட்டத்தில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்
100.01 அடியாகவும்,  நீர் இருப்பு 64.85 டிஎம்சி அடியாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவுநீர் ஆகும்.  இந்நிலையில், தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆகவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

தடையில்லா மின்சாரம் 
மேலும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரினை வேளாண் பெருமக்கள் திறம்பட பயன்படுத்தி அதிகமகசூல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கீழ்க்கண்ட அறிவுரைகளையும் துறை அலுவலர்களுக்கு நான் வழங்கியுள்ளேன்.டெல்டா பகுதிகளில் 12 மணி நேரதடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுப் பணித்   துறையின்   மூலம்  ஏ & பி பாசன வாய்க்கால்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் சி & டி பாசன வாய்க்கால்களும் விரைவாக தூர்வாரப்பட வேண்டும்.  பொதுப் பணித் துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அனைத்து டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறுகிய கால நெல் ரக விதைகளை  தேவையான அளவு இருப்பில்வைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும்.நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், உழுவை இயந்திரங்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட வேண்டும்.

முகக்கவசம் அணிந்து சாகுபடி பணி
தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, விவசாயப்பெருமக்களும், வேளாண் தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளி யினை பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு, 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது.  இன்று நான் அறிவித்த அறிவிப்பின் மூலம் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;