tamilnadu

img

முதலாளிகளை மிஞ்சிய முதலாளித்துவ விசுவாசம்!

சமீபத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்து பெண் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததையொட்டி தொழிற்சங்கம் வைப்பது ஒரு மிகப்பெரிய குற்றம் என்பது போலவும், அதனால்தான் தொழிற்சாலைகள் மூடப்படுவதாகவும் ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தொழிற்சாலை நிர்வாகமும், தொழிற்சங்கமும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டுமென்று ஒருவர் வலியுறுத்துவதில் எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால், தொழிற்சாலை நிர்வாகங்கள் என்ன தவறு செய்தாலும் அதைப்பற்றி கேள்வி கேட்கக் கூடாது, கேள்வி கேட்க வேண்டிய அரசு நிர்வாகங்கள் கடமை தவறியிருந்தால் அதை தட்டிக் கேட்கக் கூடாது என்பது முதலாளித்துவத்திற்கும், முதலாளிகளுக்கும் ஆதரவான குரலே தவிர, தொழில் அமைதிக்கான குரல் அல்ல.

ஃபாக்ஸ்கானில் தொழிற்சங்கம் ஏதுமில்லை. தொழிற்சங்கம் வைப்பதை அந்த நிர்வாகம் அனுமதிப்பதும் இல்லை. அங்கு அனைத்துமே நிரந்தர தொழில்தான். ஆனால், வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அத்தக்கூலிதான். தங்குமிடத்தை நடத்துவதற்கு ஒரு ஒப்பந்ததாரர், உணவு படைப்பதற்கு ஒரு ஒப்பந்ததாரர், போக்குவரத்தை பார்ப்பதற்கு ஒரு ஒப்பந்ததாரர் என்று அனைத்தையும் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவே ஃபாக்ஸ்கான் நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானது. நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பிறகு இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் இதுதான் நிலையாக இருக்கிறது.

சங்கம் வைத்தால் ஓரளவு நியாயம் கிடைக்கிறது. அந்த இடங்களிலும் கூட 100 சதவிகிதம் சட்டங்கள் அமலாக்கப்படுவதில்லை. நிர்வாகங்களும், அரசும் தலையிட முடியாத அளவிற்கு அந்நிய வலுவானவர்களாக இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வெளியில் தெரியாத அளவிற்கு தங்களுக்குள் சங்கம் அமைத்துக் கொண்டது போலவே செயல்படுகிறார்கள்.

சிலரது எழுத்துக்களில் நல்ல முதலாளி, கெட்ட முதலாளி என்றெல்லாம் தரம் பிரித்திருக்கிறார்கள். ஒரு முதலாளி மிகவும் நல்லவராக இருந்து தொழிலாளர்களுக்கு எல்லா சட்டப்படியான எல்லா சலுகைகளும் அளித்தார் என்றால் இதர எல்லா முதலாளிகளும் சேர்ந்து கொண்டு தொழிலிருந்தே அகற்றிவிடுவார்கள். எனவே, நல்லெண்ணம் கொண்ட இயல்பான ஒரு மனிதர் கூட, தொழில் செய்ய ஆரம்பித்தபோது இதர முதலாளிகள் என்ன செய்கிறார்களோ, அதை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.

எந்தவொரு தொழிற்சாலையும் இந்தியாவில் தொழிற்சங்க போராட்டத்தினால் மூடப்பட்டதாக சரித்தரமே கிடையாது. ஆனால் முதலாளிகள் போதுமான லாபம் கிடைக்கவில்லையென்றால் உடனடியாக தொழிற்சாலையை மூடிவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிடுகிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் ஃபோர்டு தொழிற்சாலை. தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள்... குஜராத்தில் ஏன் மூடுகிறார்கள்?

தமிழ்நாட்டிலும் ஃபோர்டு தொழிற்சாலை தொழிலாளர்கள் பிரச்சனையில்தான் தொழிலை மூடுகிறோம் என்று சொல்கிறார்களா?. சில வருடங்களுக்கு முந்தைய தமிழ்நாட்டு உதாரணம் நோக்கியா. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிச்சலுகையை மொத்தமாக பெற்றுக் கொண்டு, உள்நாட்டில் விற்பனை செய்த மொபைல் போன்களுக்கும் அந்த சலுகையை பெற்றுக் கொண்ட முறையில் 2430 கோடி ரூபாய் தமிழக அரசை ஏமாற்றியதாகவும், 21000 கோடி ரூபாய் மத்திய அரசை ஏமாற்றிவிட்டதாகவும் சென்னை மற்றும் புதுதில்லி உயர்நீதிமன்றங்களில் வழக்கு நடந்து கொண்டிருந்த போதுதான் அவர்கள் இதை மூடிவிட்டுப் போனார்கள். அவர்களும் தொழிற்சங்கப் பிரச்சனையால் மூடுகிறோம் என்று பேசவில்லை.

ஸ்டாண்டர்ட் மோட்டர் தொழிற்சாலை தொழிலாளர் பிரச்சனையால் மூடப்பட்டதாகவும், அது மூடப்படுவதற்கு முன்பு, அந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு ஒரு சொர்க்கமே உருவாக்கப்பட்டிருந்ததாகவும், தொழிலாளர்களின் போராட்டத்தினால்தான் அந்த தொழிற்சாலை மூடப்பட்டதாகவும் சில தமிழ்நாட்டுக்காரர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது சங்பரிவாரின் ஸ்டைல்.

ஸ்டாண்டர்ட் மோட்டார் மட்டுமல்ல. அம்பாசிடர் தொழிற்சாலையும் மூடப்பட்டது. இரண்டு தொழிற்சாலைகளும் நவீனப்படுத்தாததன் காரணமாக மூடப்பட்டவை. சென்னையிலிருந்த 6, 7 கிராம்ப்டன் கிரிவ்ஸ் தொழிற்சாலைகளில் பலவும் மூடப்பட்டன. அதற்கும் இதுவே பிரச்சனை. இதுபோன்று எழுதுபவர்கள் இன்னும் சில நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் தொழிற்சங்க போராட்டத்தால் மூடப்பட்டதாகவும் அதற்கும் செங்கொடி தொழிற்சங்கம்தான் காரணம் என்றும் கூட சொல்லக்கூடும்.

1905ம் ஆண்டில் தமிழகத்தில் தூத்துக்குடியில் வ.உ.சி. தொழிற்சங்கம் ஆரம்பித்தார். ஹார்வி மில் என்றழைக்கப்பட்ட பின்னர் மதுரா கோட்ஸ் ஆகிய அந்த தொழிற்சாலையில்தான் இந்த போராட்டம் நடைபெற்றது. வார விடுமுறையே கிடையாது, கை ரேகை பார்த்துதான் வேலை நேரம் நிர்ணயிக்கப்படும். அதாவது, கைரேகை தெரியும் போது வேலைக்குச் செல்ல வேண்டும். வெளிச்சம் குறைத்து கை ரேகை மறையும் போது வேலை நேரம் முடியும். இதுதான் அன்றைய நிலை. இதை எதிர்த்துதான் வ.உ.சி. போராடினார். அவரையும் 'மூடுவிழா' தொழிற்சங்கவாதி லிஸ்டில் சேர்த்து அவராலும் தொழிற்சாலைகள் வராமல் போய்விட்டன என்று இதுபோன்றவர்கள் சொல்லாமல் விட்டது பெரும் புண்ணியம்.

தொழிலாளர் துறையில் ஏதாவது ஒரு ஆவணத்தில் இருந்து தொழிலாளர்கள் பிரச்சனையால்தான் குறிப்பிட்ட எந்தவொரு நிறுவனமும் மூடப்பட்டது என்று இவர்கள் காண்பிக்க மாட்டார்கள்.

எந்தவொரு தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் போராட்டங்கள் நடக்கிறது என்கிற காரணத்திற்காக லாபம் இருந்தால் எந்தவொரு முதலாளியும் தொழிற்சாலையை மூடி விட மாட்டார். எவ்வளவு அமைதி நிலவினாலும் லாபம் இல்லையென்றால் தொழில் வளர்ச்சி, தொழிலாளர் வேலை என்பதற்காக பாவம் பார்த்து எந்த முதலாளியும் நட்டத்தில் இயங்குகிற தொழிற்சாலையை நடத்திக் கொண்டே இருக்க மாட்டார். இதுதான் உண்மை.

தொழிற்சங்கங்கள் இருப்பதன் காரணமாகத்தான் ஓரளவுக்கேனும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. தொழிற்சங்கங்கள் இல்லாத ஐ.டி. நிறுவனங்களில் கேள்வி கேட்பாரற்று வேலை நீக்கம் செய்கிறார்கள். பல பன்னாட்டு கம்பெனிகளும் இதில் விதிவிலக்கல்ல. உண்மையைச் சொல்லப்போனால், அங்கு தொழிற்சங்கம் வைப்பதற்கே அவர்கள் அனுமதிப்பதில்லை. ஃபாக்ஸ்கானிலும் அதுதான் நிலை.

தொழிலாளி பக்கம் ஆதரவாக நின்றோ, நிர்வாகத் தரப்பில் ஆதரவாக நின்றோ பேசாமல் நடுநிலையோடு ஒருவர் இந்த பிரச்சனையை பார்த்தால் கூட எப்படி இத்தனை ஆயிரம் பேர் தினக் கூலிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் நிரந்தரம் செய்யப்படவில்லை? ஏன் கெட்டுப்போன உணவுகளை கொடுத்தார்கள்? பாதிக்கப்பட்டவர்கள் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஏன் சொல்லவில்லை?. நான்கு நாள் கழித்து சொன்னவர்கள் 'ஒருவரும் மரணிக்கவில்லை' என்று முதல் நாளே ஏன் சொல்லவில்லை? என்கிற கேள்விகளை எழுப்பியிருப்பார்கள். இது எதற்கும் மனமின்றி நல்ல முதலாளி, கெட்ட முதலாளி, நல்ல தொழிற்சங்கம், நாசகர தொழிற்சங்கம் என்று பேசிக் கொண்டிருப்பது முதலாளிகள் செய்யும் அட்டூழியத்தையும், முதலாளித்துவத்தின் இயல்பையும் அறியாதவர்கள் அல்லது அறிந்தும் தொழிலாளி வர்க்கத்தின் மீதான வன்மத்தின் காரணமாக அப்படி எழுதுபவர்கள்.

ரகுராம் ராஜன் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்கள் கூட “முதலாளிகளிடமிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்ற வேண்டும்” என்று புத்தகம் எழுத வேண்டியது இருந்ததையோ தொழில் மற்றும் நிதி சீரமைப்பு வாரிய தலைவராக இருந்த ஒருவர் “நலிவடைந்த தொழிற்சாலைகளை பார்க்க முடிகிறது, ஆனால் நலிவடைந்த முதலாளிகள் யாரையும் நான் பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்ததையோ கூட இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

தொழிற்சங்கம் இல்லையேல் தொழிலாளர்கள் உரிமைக்கு சவக்குழிதான். தொழிற்சங்கம் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. எவரும் இட்ட பிச்சையல்ல. தொழிற்சங்கத்தில் சேருவது ஒவ்வொருவரின் உரிமையும், கடமையும். தொழிற்சங்கத்தை அழைத்து பேச வேண்டியது நிர்வாகங்களின் அவசியமான கடமை. அதை உத்தரவாதப்படுத்த வேண்டியது அரசு அமைப்புகளின் பொறுப்பு. அதைவிடுத்துவிட்டு தொழிற்சங்கம் வைத்தால் தொழில்கள் ஓடிப் போகும் என்ற பூச்சாண்டி அப்பட்டமான முதலாளித்துவதற்கு விசுவாசமான பஜனையே.

-Kanagaraj Karuppaiah

 

;