tamilnadu

img

கட்டணங்களை அரசே நிர்ணயிக்க வேண்டும் கால்டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை

சென்னை, மே 7 - பொதுப்போக்குவரத்தான கால்டாக்சிகளின் கட்டணத்தை அரசேநிர்ணயிக்க வேண்டும் என்று ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட பேரவை செவ்வாயன்று (மே 7) தரமணியில் நடைபெற்றது. பேரவையில், ஓலா, உபேர் நிறுவனங்களில் 240 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு போனஸ், பிஎப், இஎஸ்ஐ வழங்க வேண்டும், பரனூர் முதல் காரனோடை வரை உள்ள டோல்கேட்டுகளில் உள்ளூர் கால்டாக்சிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஓலா, உபேர் நிறுவனங்கள் ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தவும், ஓய்வெடுக்கவும் வசதிகளை ஏற்படுத்தவேண்டும், காவல்துறை ஓட்டுநர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தப்பேரவைக்கு ஆர்.மணிகண்டன் தலைமை தாங்கினார். அரசு வரவேற்றார். தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.மூர்த்தி, பொருளாளர் வி.குப்புசாமி, தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆறுமுகநயினார், பொதுச் செயலாளர் மு.பூபதி, சிறுபான்மை மக்கள் நலக்குழு தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ரபீக் உள்ளிட்டோர் பேசினர்.சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.மணிகண்டன், பொதுச் செயலாளராக எம்.கார்த்திக், பொருளாளராக கே.கோபிநாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

;