tamilnadu

img

பூம் பூம் மாட்டுக் காரனுக்கு ‘’ கரண்ட் ஒரு கேடா

கடந்த 15 ஆண்டுகளாக வானூர் வட்டத்திற்குட்பட்ட அச்சரம்பட்டு ஊராட்சியில் இரும்பை ரோட்டில் சாலையோரம் தற்காலிக டென்டுகளில் 22 குடும்பத்தை சேர்ந்த ஆதியன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் குடியிருந்து வந்தனர். இவர்கள் தங்களுக்கு நிரந்தர குடியிருப்பு அமைக்க அரசிடம் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அரசோ, அரசு அதிகாரிகளோ இவர்களை கண்டு கொள்ளவுமில்லை. இக்கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. அதனால் இம்மக்கள் எப்பொழுதும் போல் ரோட்டோரம் வசித்து வந்தனர்.இந்நிலையில், அக்கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையிலெடுத்து வானூர் வட்டச் செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் தொடர் போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் 22 பேருக்கு ஒரு சென்ட் வீதம் இலவச வீட்டு மனைகளை ஒதுக்கி இலவசப் பட்டா வழங்கியது. அந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் சார்பில் நிதி பெற்று கூறை வீடுகள் கட்டிக் கொடுத்து தெரு வசதி செய்து கொடுக்கப்பட்டது.மேலும், மின்வாரியத்தில் கோரிக்கை வைத்து அப்பகுதிக்கு தேவையான மின்கம்பங்கள் நடப்பட்டன. உள்ளாட்சி துறையிடம் முறையிட்டு முதற்கட்டமாக மினி டேங்க் மற்றும் மோட்டார் வசதி செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த நான்கு பேருக்கு கடந்த ஆண்டு மிண் இணைப்பு தரப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ராக்கம்மாள், அங்காளம்மாள், பவாணி உள்பட நான்கு பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வேண்டி திருச்சிற்றம்பலம் தெற்கு பகுதி உதவி இளைநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் அனைத்து ஆவணங்களுடன் மனு அளித்துள்ளனர். இம்மனுக்களை விசாரித்த சம்மந்தப்பட்ட அலுவலக அதிகாரி உதவி இளநிலை மின் பொறியாளர் சங்கரநாராயணன் மின் இணைப்பு வழங்க காலம் கடத்தி வருவதாக கூறாமல் பூம் பூம் மாட்டுகாரன்களுக்கு கரண்ட் ஒரு கேடா என சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.அதிகாரியின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டம் தெரிவித்திருக்கிறது. ஆதியன் பழங்குடி இன மக்களை சாதி பெயரைக் கூறி ஏலனமாக பேசி இழிபடுத்திய அதிகாரி மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி குடியிருப்புகள் கட்டியுள்ள நிலையில் ஓராண்டுகளாக தெரு விளக்கு வசதிகள் செய்யப்படாததை கண்டித்தும் இம் மாதம் 28 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின் கம்பங்கள் வந்து ஓராண்டாகிறது, இதுவரை மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த நான்கு பேருக்கு இதற்கு முன்பு இருந்த அதிகாரி மின் இணைப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்த அதிகாரி ஏன் எதற்காக மின் இணைப்பு வழங்க மறுத்து வருகிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளதாக அம்மக்கள் ஆதங்கப்படுகின்றனர். புயல், அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் பருவ மழையின் போது கூறை வீடுகள் பாதிக்கப்பட்டு வீட்டை இழக்கும் அபாயம் உள்ளதால் இவர்களுக்கு குடிசை இல்லா தமிழகம் என்ற தமிழக முதல்வர் வாக்குப் படி கடந்த ஆண்டு இம்மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் கோரிக்கை மனு கொடுத்த போது மாவட்ட ஆட்சியர் வாய்மொழி உறுதி அளித்தது போல் அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச வீடு வழங்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். -பாவாடை பொன்னுசாமி