தமிழகத்தில் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாத கட்சியாக பாஜக உள்ளது என அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணை தலைவரும் , அதிமுக முன்னாள் அமைச்சருமான பொன்னையன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு திட்டக் குழுவின் பெயர், வளர்ச்சி குழு என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் தருவதே குழுவின் நோக்கம் என்றார். விவசாயத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மத்திய பாஜக அரசு மிருக பலத்துடன் ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றிவிட்டார்கள். ஜி.எஸ்.டி. திட்டத்தால் தமிழக அரசிற்கு எந்த பயனும் இல்லை. தமிழகத்துக்கு தர வேண்டிய ரூபாய் 16 ஆயிரம் கோடியை தரவில்லை. தமிழகத்தில் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாத கட்சியாக பாஜக உள்ளது. அதனால் கேட்டுப் பெற வேண்டிய சூழல் உள்ளது என்றார்.
மேலும் முல்லைப்பெரியாறு, காவிரி விவகாரத்திலும் மத்திய பாஜக அரசு ஒன்றும் செய்யவில்லை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை காலில் மிதித்துவிட்டு கர்நாடகாவில் இருந்து இன்று வரை காவிரி நீர் திறந்துவிடப்படவில்லை. என கடுமையாக பாஜகவை அவர் விமர்சித்துள்ளார்.