tamilnadu

img

இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க-வை மிரட்டுகிறது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க-வை மிரட்டுகிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA எனப் பெயர் சூட்டப்பட்டதை அடுத்து, இந்தியா என்ற பெயரை பாஜக அரசு புறக்கணித்து வருகின்றனது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கான அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக "பாரத ஜனாதிபதி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க-வை மிரட்டுகிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
"பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.
அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.