tamilnadu

பீன்ஸ் கிலோ ரூ.160, தக்காளி ரூ.40-க்கு விற்பனை

சென்னை, ஏப்.23-பருவ மழை பெய்யாததாலும் கடும் வறட்சியாலும் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது. கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு காய்கறி லாரி லோடு வரத்து பாதியாக குறைந்துள்ளது. மேலும், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட அண்டை மாநிலங்களிலும் கடும் வெயில் காரணமாக காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 10 லாரிகளில் பீன்ஸ் கொண்டு வரப்படும். தற்போது இது பாதியாக குறைந்து விட்டது. இதனால் பீன்ஸ் விலை ரூ.130 ஆக உயர்ந்தது.கடந்த சில நாட்களாக உதகைமண்டலத்தில் உற்பத்தியாகும் பீன்ஸ் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவில்லை. மழை இல்லாததாலும் கடும் வெயிலாலும் காய்கறி விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளியின் விலை இரட்டிப்பாகி கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. பாகற்காய், புடலங்காய் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 375 லாரி லோடு லாரியில் காய்கறிகள் வரும். தற்போது 300 லாரி லோடுகளாக குறைந்து விட்டது. காய்கறி வரத்து குறைந்ததால் பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.160 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

;