tamilnadu

img

தேசம் காக்கும் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள்....

சென்னை:
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தி.தமிழரசு, பொதுச்செயலாளர் என்.ராஜகோபால் ஆகியோர் விடுத்துள்ள செய்தி வருமாறு:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் கொள்கைக்கு எதிராகவும் குறிப்பாக 2 பொதுத்துறை வங்கிகளையும் ஐடிபிஐ வங்கியையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை எதிர்த்தும் 10 லட்சம் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் மார்ச் 15,16 ஆகிய நாட்களில்  அகில இந்திய வேலைநிறுத்தத்தினை மேற்கொண்டிருக்கின்றார்கள்.சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தனியார் துறையில் செயல்பட்டு வந்த வங்கிகள் சமூக அக்கறையோடும் நாட்டின் அடிப்படை கட்டமைப்பிலும் தங்களின் எந்தவொரு பங்களிப்பையும் செலுத்தவில்லை என்பது வரலாறு. அதேபோல் இவ்வங்கிகள்அனைத்தும் தங்களுக்கான சுயலாபத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டு மக்களின் சேமிப்பினை தங்களது நிறுவனங்களுக்கே மடைமாற்றி செயல்பட்டதினால் 550க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலான- கசப்பான முன்னுதாரணங்களும் நம் நாட்டில் உண்டு.

மக்களின் சேமிப்பினை பாதுகாத்திடவும் எல்லா தரப்பு மக்களுக்கும் வங்கிக் கடன்சேவையும் சென்றடையவும் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கவும் 19 ஜூலை 1969 அன்றைய காங்கிரஸ் அரசு 14 வங்கிகளை தேசியமயமாக்கியது. அதைத் தொடர்ந்து 1980ல் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதன்பின்னர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுத்துறை வங்கிகளின் பங்கு என்பது நாட்டின் உட்கட்டமைப்பிற்கும் பல துறைகளில் இந்தியாதன்னிறைவு பெறுவதற்கும் சுயசார்பு தன்மையோடு நம் நாடு விளங்குவதற்கும் பல வகைகளிலும் தங்களது சேவையினை மக்களின் பேராதரவோடு செய்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் என்று வந்த பின்புதான் கிராமப்புறங்களில் கிளைகள் துவங்குவது என்பது பெருமளவில் வெற்றி கண்டது. விவசாயம், தொழில்துறை, கல்விக்கடன், வீட்டு வசதிக் கடன், பெண்கள் சுயஉதவிக் குழு கடன் என்று இன்னும் பல வகைகளிலும் மக்களின் பொருளாதாரத் தரத்தை உயர்த்தியதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கினை யாரும் மறுதலிக்க இயலாது.

வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலுக்கிணங்க மார்ச் 15,16ஆகிய நாட்களில் நாடெங்கிலும் உள்ள பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், கிராம வங்கிகளில் உள்ள ஊழியர்களும் அதிகாரிகளும் தேசம் காக்கும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தப் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களும் 500க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினரும் ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் இன்றைய தினத்தை பொதுத்துறை பாதுகாப்பு இயக்கமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மார்ச் 15 அன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. இதேபோல் தமிழகமெங்கும் எல்லா மையங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. தேசம் காக்கும் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் அமைப்பினரோடு வங்கி வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் தங்களின் பேராதவை நல்கினர். இந்த 2 நாட்கள் வங்கிச் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு.

;